ஆர்.எஸ்.எஸ்.சுடன் பட்னாவிஸ் ஆலோசனை

0 282

மகாராஷ்டிர சட்டமன்ற பதவிக்காலம் முடிவடைய இன்னும் மூன்று நாட்களே அவகாசம் உள்ள நிலையில், பாஜக-சிவசேனா இடையிலான விரிசலை சரிப்படுத்த ஆர்.எஸ்.எஸ். உதவியை நாடியுள்ளார் தேவேந்திர பத்னாவிஸ். இதனிடையே, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுமாறு சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி நிபந்தனை விதித்துள்ளது.

மகாராஷ்ட்ரா முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத்தை நேற்று இரவு சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மகாராஷ்ட்ர அரசியல் நிலவரம், சிவசேனாவின் நிலைப்பாடு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் சுமார் ஒன்றரை மணி நேரமாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டன. சரத் பவாரின் ஆதரவைக் கோர பாஜக தயாராக இருப்பதாக பத்னாவிஸ் கூறியதை ஆர்.எஸ்.எஸ் ஏற்கவில்லை. மகாராஷ்டிராவில் இந்துத்துவா அரசு அமைவதுடன், பாஜகவைச் சேர்ந்தவர் முதலமைச்சராக வேண்டும் என்பதுதான் மக்கள் அளித்த தீர்ப்பாக உள்ளது.

எனவே, இதனை மதிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ், கருத்து தெரிவித்துள்ளது. சிவசேனாவுடன் பேச்சு நடத்த நிதின் கட்கரியை அனுப்பலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரேயுடன் நிதின் கட்கரிக்கு உள்ள தனிப்பட்ட நட்பை பயன்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

இதனிடையே மகாராஷ்ட்ராவில் பாஜக அல்லாத மாற்று அரசு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சிவசேனாவுக்கும் தேசியவாத காங்கிரசுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. முதலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.

தற்போதைய மகாராஷ்ட்ரா பாஜக அரசிலிருந்து சிவசேனா அமைச்சர் சாவந்த் ராஜினாமா செய்யவும் தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. மகாராஷ்ட்ராவில் அரசு அமைப்பதற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் தீவிர ஆலோசனையில் சிவசேனா ஈடுபட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments