மழைநீரை சேகரிக்க ஆழ்துளை கிணறுகள்

0 290

பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேகரிப்புகளாக மாற்ற வேண்டியதன் அவசியம், வழிமுறைகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு......

குக்கிராமங்கள் தொடங்கி, பெருநகரங்கள் வரை வீட்டுத் தேவைக்காகவும் விவசாயத் தேவைக்காகவும் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பது என்பது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

சில ஆயிரங்களில் முடிந்த ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கான செலவு இன்று சில லட்சங்களைத் தொட்டு நிற்கிறது. ஆனாலும் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் எல்லா இடங்களிலும் தண்ணீர் கிடைத்துவிடுவது இல்லை.

ஆயிரம் அடி ஆழம் வரை கூட துளையிட்டு தண்ணீர் கிடைக்காத நிலையில், அவற்றை அப்படியே கைவிட்டுச் செல்வது பலரது வழக்கமாக இருக்கிறது. ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கும்போது, தரைமட்டத்திலிருந்து சுமார் இரண்டு அடி உயரத்துக்கு பி.வி.சி குழாய்கள் பொருத்தப்படுகின்றன.

பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த பி.வி.சி குழாய்களை உருவி எடுத்துவிடும் பழக்கமும் பலரிடம் இருக்கிறது. சில இடங்களில் தண்ணீர் கிடைக்காதபோது, பி.வி.சி குழாய்களையே பொருத்துவதில்லை. ஏழரை அங்குல விட்டம் கொண்ட அந்தக் குழாய் இருக்கும்போது அதில் குழந்தைகள் விழ வாய்ப்பு இல்லை.

இல்லையென்றால் துளையின் அகலம் அதிகரித்து குழந்தைகள் எளிதில் உள்ளே விழுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பி.வி.சி குழாய்களை உருவி எடுக்கக் கூடாது என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

லட்சங்களில் செலவு செய்து அமைக்கப்படும் ஆழ்துளைக் கிணறுகளை தண்ணீர் கிடைக்காவிட்டால் அப்படியே மூடிவைப்பதைத் தவிர்க்க அவற்றை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றலாமே என ஆலோசித்த அரசு, அதனை உடனடியாக செயல்படுத்தவும் உத்தரவிட்டது.

அவ்வாறு மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றும்போது, அந்தப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக அதிகரிக்கிறது. அதன்படி மாவட்டங்கள் தோறும் ஆட்சியர்களின் வழிகாட்டுதல்படி இந்தப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றப்படும் அத்தகைய ஆழ்துளைக் கிணறுகளில் வீடுகளின் மொட்டை மாடியில் இருந்து வரும் தண்ணீர், மழைக்காலங்களில் வீட்டைச் சுற்றி ஓடும் தண்ணீர், வயல்வெளிகளில் இருந்து உபரி நீராக வெளியேறும் நீர் என எல்லாவற்றையும் முறையாக குழாய்களை அமைத்து செலுத்தலாம்.

பொதுவெளியிலும் வீதிகளிலும் குடிநீர்த் தேவைக்காகத் தோண்டப்பட்டு பயன் இல்லாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகள் குறித்து தகவல் தெரிவித்தால் குடிநீர் வடிகால் வாரியம், உள்ளாட்சி துறையினர் சேர்ந்து அவற்றை மழை நீர் கட்டமைப்பாக மாற்றிவிடுவார்கள்.

அதேபோல் வீடுகள், தோட்டங்கள், வயல்வெளிகளில் அமைத்துத் தண்ணீர் கிடைக்காமல் போனதால் பயனற்றுக் கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளை மழை நீர் சேகரிப்புக் கட்டமைப்பாக மாற்றுவதற்கு உள்ளாட்சி அமைப்புகளையோ, தனியார் அமைப்புகளையோ அணுகலாம்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இயங்கி வரும் கைஃபா என்ற அமைப்பு மிகக்குறைந்த செலவில் இந்தப் பணிகளை செய்து வருகிறது. பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றும் முறை குறித்து கைஃபா அமைப்பின் பொருளாளர் கார்த்திகேயன் விளக்குகிறார்.

கட்டாயம் செய்தே ஆக வேண்டிய ஒரு காரியத்தை நேரம் ஒதுக்கி சிரத்தை எடுத்து செய்தல் என்பது பொறுப்புணர்வு கொண்ட ஒவ்வொருவரின் பழக்கமாக இருக்கும்.

அந்த வகையில் பயன்பாட்டில் இல்லாத, பராமரிப்பில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை எங்கே பார்த்தாலும், அவற்றை மூடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையுமாகும்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments