வேகமாக நிரம்பி வரும் நீர் நிலைகள்..

0 288

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அணைகள், ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து அவைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

கடலூர் 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்தது. இதன் காரணமாக ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளாற்றில் கலந்து புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணை வந்தடைந்தது.

5 அடி உயரமும் சுமார் 2 கிலோமீட்டர் தூரமும் கொண்ட தடுப்பணை நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி, விருத்தாசலம், மங்கலம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விழுப்புரம் 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, மேல்மலையனூர், பனமலைபேட்டை ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருவதால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் மோழியனூரில் உள்ள தடுப்பணை நிரம்பி அருவி போல கொட்டுகிறது. இந்த தண்ணீர் இரட்டணை, தென் புத்தூர், மோழியனூர், பேரணி வழியாக வீடூர் அணையை சென்றடைகிறது.

விருதுநகர் 

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பெய்து வரும் மழையால் பள்ளிமடம் பகுதியில் உள்ள கண்மாய் 8 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளது.

தமிழக அரசின் குடிமராமத்துப் பணி திட்டத்தின் கீழ் இந்த கண்மாய் சுமார் 50 லட்சம் ரூபாய் செலவில் தூர் வாரப்பட்டதால் நீர் நிரம்பியுள்ளதாகவும், இதன்மூலம் பள்ளிமடம், சூச்சனேரி, நாடாகுளம், கொக்குளம் மற்றும் காரேந்தல் கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் 

ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட காட்டு பிள்ளையார் கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் குண்டூரணி குளத்தில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் வெளியேறி வருகிறது.

அருகில் உள்ள பல வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால், பெண்களும் பள்ளிக்குழந்தைகளும், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். மழை நீரை வெளியேற்ற நகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தனுஷ்கோடி 

தனுஷ்கோடி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சீறிப்பாய்ந்த அலைகளால் அரிச்சல் முனையில் மணல் புயலை தடுக்க அமைக்கப்பட்ட பனை மட்டை வேலி சேதமடைந்தது.

 ராமநாதபுரம்

தொடர் மழையால் சாயல்குடியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது.

தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக மாணவிகளும் பெற்றோரும் புகார் கூறியதையடுத்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. தேங்கியுள்ள மழை நீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் 

சேலம் கன்னங்குறிச்சி அருகில் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள புது ஏரி, ஏற்காடு மலைப்பகுதியில் பெய்த மழையால் 4 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வழிகிறது. இங்கிருந்து வெளியேறும் தண்ணீர் கால்வாய் வழியாக மூக்கனேரிக்கு செல்கிறது.

இதையடுத்து மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் ஏரிக்கரையில் உள்ள முனியப்பன் கோவிலில் பூஜை செய்து வழிபட்டனர். இந்நிலையில் இளைஞர்கள் ஆபத்தை உணராமல் நீச்சல் அடித்து குளிப்பதாலும், ஏரி அருகில் நின்று செல்பி எடுப்பதாலும் பாதுகாப்பு போடப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி 

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைபபகுதியில் பெய்து வரும் கன மழையால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றின் குறுக்கே குற்றியாறு பகுதியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் ஓடுகிறது.

இதனால் 48 மலை கிராம மக்கள் மற்றும் கோதையாறு மின் உற்பத்தி மையத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அரசு ரப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் இதன் மீது பாத சாரிகளும், வாகனங்களும் ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் நிலையில், இங்கு மேல்மட்ட பாலம் கட்டவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments