பட்டாசு வெடிக்கும் நேரம்.? தமிழ்நாடு அரசு அறிவிப்பு

0 2742

தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு வெடிக்கும் நேரத்தை, தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறது. 

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான வழக்கில், தீபாவளியன்று, இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கான நேரம், தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதன்படி, தீபாவளி பண்டிகை நாளன்று, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வாயிலாக, பொதுமக்களுக்கு வழிகாட்டுதல்களையும் அரசு வழங்கியிருக்கிறது.

அதில், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி கூட்டாக பட்டாசு வெடிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளையும், தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளையும் தவிர்க்கலாம் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களில் பட்டாசு வெடிக்க கூடாது என்றும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்க கூடாது என்றும், குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது, பெரியவர்கள் உடன் இருப்பது அவசியம் என்றும் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளது.

பட்டாசு வெடிக்கும் முன், பாத்திரங்களில் தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும், கூறப்பட்டுள்ளது. தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை, பட்டாசுகளை வெடித்து மகிழலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments