தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில் பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு டிக்கெட் விற்பனை

0 1658

பிகில் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள பல திரையரங்குகளில் சிறப்புக் காட்சிக்கு என அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் எந்தப் படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடையாது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்தார்.

சிறப்பு காட்சியை திரையிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரையரங்குகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் அரசின் எச்சரிக்கையையும் மீறி பல திரையரங்குகளில் சிறப்புக் காட்சியை திரையிடுவதாகக் கூறி டிக்கெட் விற்பனை செய்து வரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

வரும் 25 ஆம் தேதி வெளியாக உள்ள பிகில் திரைப்படத்தைக் காண திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள திரையரங்குகளில் முன்பதிவு மற்றும் டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. ஆனால் கார்த்திகேயன், பாபு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கெனக் கூறி அரசு நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் பல மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிறப்பு காட்சி இல்லாத பட்சத்தில் 6 மணி அல்லது 7 மணிக்குத் தொடங்கும் முதல் காட்சிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர் என்று திரையரங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படி இருக்கும் பட்சத்தில் முதல் காட்சிக்கு டிக்கெட் வாங்கியவர்களின் கதி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் கதி கலங்கி நிற்கின்றனர். அதே வேளையில், கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் திரையரங்குகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பிகில் திரைப்படத்தின் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு தடை விதிக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த சமூக ஆர்வலர் தேவராஜன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், அரசு விதிமுறைகளை மீறி வரும் 25 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பிகில் சிறப்புக் காட்சியை திரையிட பல திரையரங்குகள் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கான டிக்கெட்டுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களின் சிறப்புக் காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை ரத்து செய்ய திரையரங்குகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி அருகே எட்டையபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பண்டிகை நாட்களில் சிறப்புக் காட்சிக்கு அளிக்கப்பட்ட அனுமதியை சில திரையரங்குகள் தவறாக பயன்படுத்தியதால் தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாலேயே பிகில் உள்ளிட்ட திரைப்படங்களின் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இயற்கை சீற்றங்களில் இருந்து மீனவர்களை பாதுகாக்கவும், ஆபத்து காலங்களில் உதவும் வகையிலும் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை தலைமை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

அதனை திறந்து வைத்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தொடர்ந்து மீனவர்களுக்கு மானிய விலையில் பைபர் படகுகள், எஞ்ஜின் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பிகில், திகில் என எந்த திரைப்படமானாலும், யாராக இருந்தாலும் அனைவருக்கும் சட்டம் பொதுவானது எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments