நீலகிரி - மண்சரிவு அபாயம்... மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

0 216

தொடரும் கனமழையால் நீலகிரி மாவட்டத்தில்  283 இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்படும் பாதிப்புகளை போக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த பத்து நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை, இரு தினங்களாக தீவிரமடைந்துள்ளது. கனமழை காரணமாக கோத்தகிரி மிஷன் ஹில் பகுதியில் மரம் மற்றும் மண் சரிந்து சாலையில் விழுந்ததால் கடைகோடு,கப்பட்டி, அசாமில் தட்டு, கூக்கல்துரை உட்பட 10 க்கும் மேபட்ட கிராமத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவானது.

மேலும் மின் கம்பியில் மரங்கள் விழுந்ததால் அந்த கிராமங்களுக்கு செல்லும் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.கோத்தகிரி பேருந்து நிலையம் பின்பகுதியில் மண் சரிந்து
விழுந்ததால் பேருந்துகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

கூடலூர் பகுதியில் காலையில் இருந்து சாரல் மழை பெய்து வரும் நிலையில், மாலையில் மழை தீவிரமடைந்தது. கூடலூரில் இருந்து நாடுகாணி வழியாக கேரளாசெல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டதை அடுத்து, உடனடியான சீரமைப்பு பணிகளுக்கு பின்னர் வாகன போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளது. மண் மற்றும் மரம் விழுந்தால் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு 5 கிலோ மீட்டருக்கும் ஒரு ஜே.சி.பி. எந்திரத்தை நிறுத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்டத்தில் 283 இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றார். இதில் 67 இடங்கள் மிகவும் அபாயகரமானது என்பதால், அங்குள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார். மண் சரிவு அபாயம் உள்ள இடங்களை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 42 குழுக்கள் அமைக்கபட்டுள்ளதாக அவர் கூறினார். மழை பெய்யும் போது பாதுகாப்பான இடங்களில் இருக்கவும், மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.

குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண் மற்றும் பாறைகள் சரிந்துள்ளதால், மூன்று நாட்களுக்கு மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள  தேசிய நெடுஞ்சாலையில் 25 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து மேகமூட்டம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து 15 அடி பள்ளத்தில் சரிந்து  விழுந்ததில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

குன்னூர் மலைப்பாதையில் கடுமையான மேகமூட்டம் இருந்த நிலையில் மதுரையிலிருந்து 25 பயணிகளுடன் உதகைக்கு  சென்று கொண்டிருந்த அந்த பேருந்து, எதிரே வந்த லாரிக்கு வலி கொடுக்க முயன்றபோது,  மண்சரிவு ஏற்பட்டு 15 அடி பள்ளத்தில் பேருந்து சரிந்து  விபத்துக்குள்ளானது. அப்பகுதியிலிருந்த மரம் பேருந்து கீழே விழாமல் தடுத்ததால், பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments