பிகில் டிக்கெட் இலவசம்..! ரசிகர்களுக்கு சத்திய சோதனை

0 7498

நடிகர் விஜய்யின் பிகில் படத்திற்கான டிக்கெட்டை இலவசமாக தரப்போவதாக சில தனியார் நிறுவனங்கள் அறிவித்துள்ளது, சர்க்கார் படத்திற்கு பின்னர் இலவசத்தை எதிர்த்து வரும் விஜய் ரசிகர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது...

image

வீட்டில் சாப்பாட்டில் சிறு கல் கிடந்தாலே கொந்தளிக்கும் இவர்கள், நடிகர் விஜய்யின் பிகில் படம் நன்றாக ஓடி, 200 கோடி ரூபாய்க்கு படத்தை விற்றுள்ள ஏழை தயாரிப்பாளர் இன்னும் பல கோடிகள் சம்பாதிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் சோற்றை தரையில் கொட்டி சாப்பிட்டு நேர்த்தி கடன் செய்கின்றனர்.

நடிகர் விஜய் மீது வெறித்தனமான அன்பு வைத்திருக்கும் ரசிகர்கள் விஜய் படத்தில் சொல்லும் கருத்தை பின்பற்றி வருவது வழக்கம். அதனால் தான் சர்க்கார் படத்தில் இலவசத்துக்கு எதிராக விஜய் திரையில் இலவச டிவி, மிக்ஸி கிடைண்டர் மின்விசிறியை தீயில் போட்டு எரித்து செய்த ஒரு விரல் புரட்சியை, வீட்டில் இருந்த இலவச பொருட்களை தூக்கி வந்து தரையில் வீசி செய்து காட்டினர்.

டிக்டாக்கில் தளபதியின் ரசிகர்கள் இலவசத்துக்கு எதிரானவர்கள் என்று பகிரங்கப்படுத்தி வந்த நிலையில் தீபாவளிக்கு திரைக்கு வரும் பிகில் படத்தின் டிக்கெட்டையே இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ள சில தனியார் நிறுவனங்களால் விஜய் ரசிகர்களுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது

முதல் நாள் பிகில் படத்திற்கு திரையரங்குகளில் ஒரு டிக்கெட் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விலை வைத்து விற்கும் நிலையில் 1500 ரூபாய்க்கு ஜவுளி வாங்கினால் பிகில் டிக்கெட் இலவசம், மொபைல் ரீசார்ஜ் செய்தால் பிகில் டிக்கெட் இலவசம், 2000 ரூபாய்க்கு பட்டாசு வாங்கினால் 2 பிகில் டிக்கெட் என்று பல்வேறு நிருவனங்கள் பிகில் டிக்கெட்டையே இலவசமாக வழங்க தயாராகியுள்ள நிலையில் இலவசத்துக்கு எதிரான விஜய் ரசிகர்கள் அதனை பெற்றுக் கொள்வார்களா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த இலவச அறிவிப்புகள் விஜய்யின் கொள்கை மீது பற்றுள்ள ரசிகர்களுக்கு சத்திய சோதனையாக அமைந்துள்ளது.

இதற்கிடையே பிகில், கைதி என எந்த படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்துள்ள நிலையில் களியக்காவிளையில் விஜய் ரசிகர் மன்றத்தினர் திரையரங்குகளில் மொத்தமாக டிக்கெட்டுகளை வாங்கி வைத்துக் கொண்டு ஒரு டிக்கெட் 300 ரூபாய்க்கு பேரம் பேசி விற்று வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இங்கு மட்டும் அல்ல தமிழகத்தில் பெரும்பாலான திரையரங்குகளில் அரசு நிர்ணயித்துள்ள விலையை விட கூடுதல் கட்டணம் வசூலித்து சிறப்பு காட்சி வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் தயாராகி வருகின்றனர். கூடுதல் விலை கொடுத்து வாங்குவதற்கு சில விஜய் ரசிகர்களும் தயாராகவே உள்ளனர்.

அந்தவகையில் பிகில் தீபாவளி சிறப்பு காட்சிக்கு சில நிபந்தனைகளோடு அனுமதி கிடைத்து விடும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மழை பெய்தால் வெள்ளம் வருவதும், திரையரங்கு உரிமையாளர்கள் பண்டிகை நாட்களில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பதும் சகஜம் என்பதே கசப்பான உண்மை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments