தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

0 192

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் காய்ச்சலுக்கு தனிப்பிரிவு தொடங்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் போர்க்கால அடிப்படையில் முன்னெடுத்து வருகிறது.  

புதுச்சேரி 

புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் 30 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.  புதுச்சேரி அரசு மருத்துவமனை , கதிர்காமம் அரசு மருத்துவமனை , ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்டவற்றில் 100 க்கும் மேற்பட்டோர் பல்வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேலும் 30 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சுகாதார நடவடிக்கைகளை மக்களுக்கு அறிவுறுத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கரூர் 

கரூர் மாவட்டம் புலியூர் அருகே டெங்கு கொசு ஒழிப்பு துப்புரவு பணிகளை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேரில் ஆய்வு செய்தார். இங்கு புலியூர் கவண்டம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளை 6 பகுதிகளாக பிரித்து 30 க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தினசரி டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்த ஆட்சியர் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.

மேலும் அப்பகுதியில் இருந்த ஆரம்ப பள்ளிக்குச் சென்று பள்ளியை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளதா என ஆய்வு செய்த ஆட்சியர் மாணவ, மாணவிகளிடம் டெங்கு தொடர்பான துண்டு பிரசுரங்களை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.

காஞ்சிபுரம் 

காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் 20 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை இணை இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மாவட்டம் முழுவதும் செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சுமார் 211 க்கும் மேற்பட்டோர் பலவகைக் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் செங்கல்பட்டில் 12 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 8 பேருக்கும் டெங்கு உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 2000 க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் முழுமையாக டெங்குவைக் கட்டுப்படுத்த  சுகாதாரத்துறை, வருவாய்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் அடிப்படையில் திருவாரூர் முடுக்குத்தெரு உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் வீடுவீடாக சென்று ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் அந்த பகுதியில் செயல்பட்டு வந்த அன்னை சத்யா ஒர்க்ஸ் ஷாப்பில் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன டயர்களில் அதிக அளவில் டெங்கு கொசு புழுக்கள் மற்றும் கொசுக்கள் இருப்பதை கண்டறிந்து உடனடியாக மருந்தை ஊற்றி அவற்றை அழித்தனர். மேலும் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்ததால் அவர்களுக்கு ரூ.50,000 அபராதம் விதித்தனர். 

கோவை

கோவை அரசு தலைமை மருத்துவமனையில் 15 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் கூறியுள்ளார்.

இங்கு தினசரி சுமார் 200 க்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாக காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுச் செல்லும் நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலவகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாகக் கூறிய அவர் காய்ச்சல் ஏற்பட்டால் மக்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments