ரூ 20 லட்சம் கேட்டு கடத்தல்..! 20 மணி நேரத்தில் இளைஞர் மீட்பு

0 288

மதுரையில் பேஸ்புக்கில் நண்பராக பழகிய பட்டதாரி இளைஞரை கடத்திச்சென்று ரூபாய் 20 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய 7 நபர்களை கைது செய்த போலீசார், 20 மணி நேரத்தில் இளைஞரை பத்திரமாக மீட்டனர். 

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள வில்லாபுரத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராஜூ. இவரது மகன் பார்த்திபன். எம்பிஏ பட்டதாரி இளைஞரான இவர் கடந்த சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வெளியே சென்ற நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் அவரது செல்போனில் இருந்து தந்தை ராஜூவுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், பார்த்திபனை கடத்திச்சென்றிருப்பதாக கூறி, 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜு பணம் தந்து விடுவதாக கூறியதுடன் போலீசிலும் புகார் செய்துள்ளார். இதையடுத்து ரகசிய விசாரனையில் இறங்கிய அவணியாபுரம் போலீசார் ராஜூவை மர்ம நபர்களுடன் பேச வைத்ததுடன், பார்த்திபனின் தாய் ஆதிலட்சுமி மூலம் பணம் கொடுத்தனுப்பி பின்தொடர்ந்தனர்.

அப்போது திருப்பரங்குன்றம் வெள்ளக்கல் சாலையில் பணத்தை பெற்ற முருகன், சரவணன் என்ற இரு நபர்களை கைதுசெய்தனர். விசாரணையில் பார்த்திபனை தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் மறைத்து வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. பணம் வந்துவிட்டதாக, பிடிபட்ட நபர்கள் மூலம் கூட்டாளிகளுடன் போலீசார் பேசவைத்ததால், பார்த்திபனை விடுதலை செய்துள்ளனர். அவர் அங்கிருந்து பேருந்து மூலமாக நேற்று இரவு 9 மணி அளவில் வீடு வந்து சேர்ந்தார்.

இதில் தொடர்புடைய 10 பேர் கொண்ட கடத்தல் கும்பலில் 7 பேரை 20 மணி நேரத்தில் கைது செய்து போலீசார் பாராட்டு பெற்றுள்ளனர். கடத்தல் பின்னணி குறித்து விசாரித்து வருவதுடன் இந்த சம்பவத்தில் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களும், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் மீட்கப்பட்டன.

பேஸ்புக் மூலம் நண்பர்களாக அறிமுகமான மர்ம நபர்கள், நேரில் சந்திக்கலாம் என அழைப்பு விடுத்து, கண்ணையும், கை-கால்களையும் கட்டிப்போட்டு காரில் கடத்திசென்றதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார். தன்னைப்போல் சமூகவலைதளங்களில் முன்பின் தெரியாதவர்களை நம்பி தனியாக செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments