நாங்குநேரி தொகுதிக்குள் சென்றதாக எம்.பி. வசந்தகுமாரை பிடித்து போலீசார் விசாரணை

0 359

தேர்தல் நடத்தை விதிகளை மீறி நாங்குநேரி தொகுதிக்குச் சென்றதாக, கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமாரை பிடித்துச் சென்று  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், எம்.பி. வசந்தகுமார், நாங்குநேரி தொகுதிக்குச் சென்று வாக்கு மையங்களைப் பார்வையிட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட தொகுதியில் வாக்குரிமை இல்லாத ஒரு அரசியல் தலைவர், அந்தத் தொகுதிக்குச் செல்லக் கூடாது என்ற விதியை மீறும் வகையில் செயல்பாடுகள் உள்ளதாக வசந்தகுமாரை, இரு முறை போலீசார் எச்சரித்ததாக சொல்லப்படுகிறது.

களக்காடு அருகே உள்ள கலுங்கடி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அவரது காரை மறித்த போலீசார், வசந்தகுமாரை, நாங்குநேரி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அப்போது பேசிய அவர், பாளையங்கோட்டையில் இருந்து நாகர்கோவில் நோக்கி தாம் காரில் சென்று கொண்டிருந்த போது போலீசார் பிடித்து விட்டதாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து விளக்கம் அளித்த போலீசார், தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே வசந்தகுமாரை பிடித்துச் சென்று விசாரித்து வருவதாகக் கூறியுள்ளனர். விதிகளை அவர் மீறி இருப்பது உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். காவல் நிலையத்தில் உள்ள வசந்தகுமாரை, நாங்குநேரி தொகுதி வேட்பாளரான ரூபி மனோகரன் சந்தித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments