மருத்துவமனையில் ஆய்வு - குறைகள் தீர்க்கப்படும் என உறுதி

0 182

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டில் போதிய படுக்கை வசதி இல்லாமல் பெண்களும் பச்சிளம் குழந்தைகளும் தரையில் படுத்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். அங்கேயே தங்கி சிகிச்சை பெறுபவர்களுக்கு போதிய படுக்கை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக பிரசவ வார்டில் குறைவான எண்ணிக்கையிலேயே படுக்கை வசதிகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், குழந்தை பெற்றெடுத்தபின் ஒதுக்கப்படும் பிரிவில் ஒரே படுக்கையில் இருவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக நோயாளிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.

குழந்தை ஈன்ற பெண்கள் மட்டுமல்லாது, பச்சிளம் குழந்தைகளும் தரையில் விரிப்பை போட்டு படுக்கவைக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இப்படிப்பட்ட நெருக்கடியான இடத்தில் குழந்தைகளை வைத்து சிகிச்சையளிக்கப்படுவதால், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க அரசியல் கட்சியினர், மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்டோரின் சிபாரிசுடன் வருபவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து படுக்கைகளும் இதர வசதிகளும் வழங்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது. அவ்வாறு சிபாரிசு இல்லாமல் வரும் ஏழை எளிய கர்ப்பிணி பெண்களுக்கு போதிய வசதிகள் செய்துதரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.

குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில், இவ்வாறு தரையில் படுக்கவைத்து சிகிச்சையளித்தால், தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கு காய்ச்சல், ஜன்னி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எனவே உடனடியாக போதிய படுக்கை வசதிகளை செய்துதர வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் அதிகாரிகளுடன் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். காய்ச்சல் வார்டு, பிரசவ வார்டு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு சிகிச்சை நிலை குறித்து மருத்துவர்களிடமும் நோயாளிகளிடமும் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பீலா ராஜேஷிடம் மருத்துவமனையில் உள்ள குறைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கூடுதல் படுக்கை வசதிகள், செவிலியர்கள், மருத்துவமனைக்கான சாலை வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments