இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 7 சதவீதமாக உயரும் - ஐஎம்எஃப் தலைமைப் பொருளாதார அறிஞர் கீதா கோபிநாத்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 7 சதவீதமாக உயரும் என ஐஎம்எஃப் தலைமைப் பொருளாதார அறிஞர் கீதா கோபிநாத் கூறியுள்ளார்.
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என ஏற்கெனவே ஐஎம்எஃப் கூறியிருந்தது. தற்போதுள்ள மந்தநிலை சுழற்சி முறையில் ஏற்படக் கூடியதுதான் என்றும், இந்தியாவில் பல துறைகள் பாதிக்கப்பட்டிருப்பதால், பொருளாதார வளர்ச்சி விகித முன்கணிப்பை 6.1 சதவீதமாகக் குறைத்திருப்பதாகவும் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.
ஊரக வருவாய் வளர்ச்சி பலவீனமாக உள்ளதோடு, வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட் துறைகளில் பாதிப்புகள் இருப்பதாக கீதா கோபிநாத் கூறியுள்ளார். இந்த காரணிகள் முதலீடு, நுகர்வு ஆகிய இரு அம்சங்களிலும் உள்நாட்டு பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அறிவித்த கார்ப்பரேட் வரி விகித குறைப்பு மற்றும் பல்வேறு கொள்கை முடிவுகள் சரியான திசையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் கீதா கோபிநாத் கூறியுள்ளார்.
Comments