உயர்நீதிமன்றத்திற்கு மத்திய படை பாதுகாப்பு நீடிக்கும்..!

0 349

மறு உத்தரவு வரும் வரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மத்திய படை பாதுகாப்பு நீடிக்கும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் மத்திய படை பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக பரிசீலித்து 3 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற தொடர் போராட்டங்களின் விளைவாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கும், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை பாதுகாப்பு போடப்பட்டது. 2015ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கி மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டாக இந்த பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய படை பாதுகாப்பை நீட்டிப்பது தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வினீத்கோத்தாரி, நீதிபதி சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபால் ஆஜராகி, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பாதுகாப்பை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினார். தற்போதும் நீதிமன்ற வளாகத்தில் சிஎஸ்ஐஎஃப் பாதுகாப்பு இல்லாத பகுதியில் கொலை முயற்சி, போராட்டங்கள் நடைபெற்று வருவதால், உயர்நீதிமன்ற வளாகம் முழுவதற்கும் நிரந்தரமாக சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என அவர் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டாக நீட்டிப்பதற்கு பதிலாக நிரந்தரமாக நீட்டிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு ஆண்டாக நீட்டிப்பதால் வீரர்கள் இடமாற்றம் செய்யப்படுவதிலும், அவர்களின் பிள்ளைகளின் படிப்பு தொடர்பான விசயங்களும் பாதிக்கப்படும் என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், சென்னை உயர்நீதிமன்றம் முழுவதும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு கொண்டு வந்தால், வழக்குரைஞர்கள் அறைகளுக்கு வரும் வழக்கு தொடர்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றார்.

மேலும் உயர்நீதிமன்ற வளாகம் முழுவதும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு நீட்டிக்கப்படுவதற்கு முன்னர், அந்த இடங்களை பயன்படுத்துபவர்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும் வலியுறுத்தினார்.

இதனையடுத்து, மறு உத்தரவு வரும் வரை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு நீட்டிக்கப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களுக்கும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை நீட்டிக்க வேண்டுமா? என்பது குறித்து உயர்நீதிமன்ற பாதுகாப்பு குழு ஆராய்ந்து மூன்று மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையும் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments