முழு கொள்ளளவை எட்டும் பவானிசாகர்...

0 789

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம், 101 அடியை தாண்டி உயர்ந்து வருகிறது.

102 அடியை எட்டிய பிறகு உபரி நீர் திறக்கப்படும் என்பதால், பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

105 அடி நீர்தேக்கு உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 இலட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன்காரணமாக கடந்த 5 நாட்களுக்கு முன்பு 96 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இன்று காலை 101 அடியை எட்டியது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 101.09 அடியாகவும் நீர் இருப்பு 29.5 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10 ஆயிரத்து 727 கனஅடியாகவும், அணையிலிருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்படுகிறது.

105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையில் 102 அடி வரை மட்டுமே நீர் தேக்கி வைக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 102 அடியை இன்று இரவு அல்லது நாளை காலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து அணைக்கு வரும் நீர், உபரிநீராக பவானி ஆற்றில் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, பவானி ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments