காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிப்பு...

0 369

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில், டிஜிபி ஜே.கே.திரிபாதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 

1959ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாளன்று, லடாக்கில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 10 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் தேதி அன்று தேசிய காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு இன்றைய தினம் வீரவணக்கம் செலுத்தப்படுகிறது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. அலுவலகத்தில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு, சட்டம் ஒழுங்குப் பிரிவு டிஜிபி ஜே.கே.திரிபாதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

முப்படையைச் சேர்ந்த அதிகாரிகளும், காவல்துறை உயரதிகாரிகளும், வீரவணக்கம் செலுத்தினர்.

அனைத்து காவல் பிரிவுகளையும் சேர்ந்த டிஜிபிக்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பிறகு, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், அனைத்து அதிகாரிகளும் தங்களது கைகளில் கருப்பு ரிப்பன் கட்டியபடி பங்கேற்றனர்.

இதேபோல் சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

உயிர்நீத்த காவலர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்திற்கு சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது துப்பாக்கி குண்டுகள் முழங்கின.

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் நினைவு தூண் எழுப்பப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் மெகராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

126 குண்டுகள் முழங்க காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இதேபோல் கடலூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு மினி மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது. 

கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் கலந்து கொண்டு உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 

60 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments