சிலைகள் உடைப்பால் பதற்றம்... போலீஸ் குவிப்பு

0 984

ரோடு மாவட்டம் சிவகிரி அருகே ஒரு சமூகத்தினர் வழிபடும் முன்னோர் சிலைகளை, மர்மநபர்கள் கடப்பாரை மற்றும் சுத்தியலால் உடைத்து நொறுக்கியதால் பதற்றம் நிலவியது. 

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள பொன் காளியம்மன் கோவில் தொடர்பாக இரு தரப்பு மக்களிடையே பிரச்சனை இருந்ததாகவும், அது தற்போதும் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. அந்தக் கோவிலை கூரைக்காளியண்ணன் - இளையக்காளியண்ணன் என்ற சகோதரர்கள் ஒரு தரப்பு மக்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன் மீட்டுக் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இதன் நினைவாக தெப்பம்பாளையத்தில், காளியண்ணன் சகோதரர்களுக்கு சிலை அமைக்கப்பட்டது. சிலைகள் அமைப்பதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்பையும் மீறி சிலைகள் அமைக்கப்பட்டதை அடுத்து, அவற்றை அகற்றக் கோரி, அந்தத் தரப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படிப்பட்ட சூழலில், காளியண்ணன் சிலைகள் புதுப்பிக்கப்பட்டன. இந்த நிலையில், இன்று காலை காளியண்ணன் சிலைகள் உடைக்கப்பட்டிருப்பதாக சிவகிரி போலீசுக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார், சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது முகத்தை துணியால் மறைத்தபடி வந்த 7 மர்மநபர்கள், காளியண்ணன் சிலைகள் வைக்கப்பட்டிருந்த இரும்புக் கூண்டின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து சிலைகளை கடப்பாரையாலும், சுத்தியலாலும் அடித்து நொறுக்குவது பதிவாகி இருந்தது. சிசிடிவியையும் அவர்கள் சேதப்படுத்தினர்.

சிலைகள் உடைக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த தெப்பம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். சிலைகளை உடைத்த மர்மநபர்களை கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

பதற்றம் நிலவியதால் போராட்டம் நடக்கும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். இரண்டு நாட்களில் மர்மநபர்களைக் கைதுச் செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வன்முறை, கலவரத்தை தூண்டுதல், சேதம் விளைவித்தல், அத்துமீறி நுழைந்து தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் 7 பேர் மீது சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments