மகாராஷ்டிரா, ஹரியானாவில் சட்டப்பேரவைத் தேர்தல்

0 439

மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. 164 இடங்களிலும், சிவசேனா 124 இடங்களிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ் 147 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 121 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இதுதவிர ராஜ்தாக்கரேயின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகளும் போட்டியிடுகின்றன.

3,237 வேட்பாளர்களின் தலைவிதியை 8 கோடியே 98 லட்சம் வாக்காளர்கள் தீர்மானிக்கின்றனர். தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, மாநில காவல்துறையினர், மத்தியப் படையினர் என 3 லட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டப்பேரவைக்கு நடைபெறும் தேர்தலில் ஆயிரத்து 169 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பா.ஜ.க., காங்கிரஸ், சவுதாலாவின் ஜனநாயக ஜனதாக் கட்சி ஆகியவை அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

பகுஜன் சமாஜ், லோக்தளம் ஆகிய கட்சிகளும் பெரும்பலான தொகுதிகளில் போட்டியிடுகின்றன. ஒரு கோடியே 83 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர். தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 75 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதுதவிர, 18 மாநிலங்களில் 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்பது 24ந் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் தெரிய வரும்.

இருமாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் 17 மாநிலங்களில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி டிவிட்டர் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளார். 

ஜனநாயகத் திருவிழாவை செழிப்படையச் செய்ய வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் இளைஞர்கள் பெருந்திரளாக வந்து வாக்களிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments