விமான நிலையங்களை மேம்படுத்த அருகே உள்ள நிலத்தை பயன்படுத்த முடிவு

இந்தியாவில் 8 முக்கிய விமான நிலையங்கள் அருகே உள்ள 759 ஏக்கர் நிலத்தை உணவு விடுதி, கிடங்குகள் அமைப்பதற்காக குத்தகைக்கு விட விமான நிலையங்கள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
கொல்கத்தா விமான நிலையம் அருகே 145 ஏக்கர், லக்னோ விமான நிலையம் அருகே 217 ஏக்கர், திருப்பதி விமான நிலையம் அருகே 117 ஏக்கர் என 8 முக்கிய விமான நிலையங்கள் அருகே உள்ள நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய விமான நிலையங்கள் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்த நிலங்களை குத்தகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் பணம் விமான நிலையங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார். ஏதாவது நிறுவனத்திற்கோ அல்லது, அமைப்புக்கோ அந்த நிலங்கள் 25 முதல் 30 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் வழங்கப்படலாம் என்று அவர் கூறினார். நாடு முழுவதும் 129 விமான நிலையங்களை, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் நிர்வகித்து வருகிறது.
அவற்றில், 99 விமான நிலையங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக 2017 - 2018 நிதி ஆண்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே லக்னோ, அகமதாபாத் உள்ளிட்ட 6 விமான நிலையங்களின் பராமரிப்பு ஒப்பந்தம் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments