நெருங்கும் தீபாவளி..! கடைவீதிகளில் கூட்டம்

0 460

தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகள், நகைகள் வாங்க மக்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டதால், தமிழகம் முழுவதும் ஜவுளிக்கடைகள், நகைகடைகள் அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தீபாவளி வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்று விடுமுறை தினம் என்பதாலும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் முக்கிய ஜவுளி கடைகள், நகைக்கடைகள் இருக்கும் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

சென்னையில் தியாகராயநகர், பழைய வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டனர்.

தியாகராயநகரில் பாதுகாப்புக்காக 1,300 சிசிடிவி கேமராக்களை பொருத்தி போலீஸார் கண்காணித்தனர். 500க்கும் மேற்பட்ட போலீஸார் ரோந்து வந்தனர்.

பழைய வண்ணாரப்பேட்டையில் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஜவுளிகள் உள்ளிட்ட பொருள்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.

கோவையில் காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, 100 அடி சாலை பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகள், நகைக் கடைகளுக்கு, மாவட்டம் முழுவதும் இருந்தும் பொதுமக்கள், துணிகள் நகைகள் எடுக்க வந்த வண்ணம் இருந்தனர். கூட்டத்தை பயன்படுத்தி திருடர்கள் கைவரிசை காட்டிவிடாமல் தடுக்க பாதுகாப்பு கோபுரம் அமைத்து 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டனர்.

திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் போனஸ் வாங்கிய கையுடன் பண்டிகைக்கு தேவையான இனிப்புகள், பட்டாசுகள், புத்தாடைகள் வாங்கினர்.

ஈரோடு கடைவீதிப் பகுதியிலுள்ள கனிமார்க்கெட், ஜவுளிச் சந்தைகளிலுள்ள ஜவுளி விற்பனை நிலையங்கள், பெரிய விற்பனை நிலையங்கள் வரை அனைத்து வகை விற்பனை நிலையங்களிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

திருச்சியில் என்எஸ்ஜி ரோடு, பெரிய கடை வீதி, சின்னகடை வீதி, சிங்கார தோப்பு பகுதியிலுள்ள ஜவுளி கடைகள், நகைகடைகள், அழகு சாதன பொருள்கள் விற்பனை கடைகள் உள்ளிட்டவை மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தது. திருச்சியில் முன்னெச்சரிக்கையாக 200 சிசிடிவி கேமராக்களை பொருத்தி போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினத்தில் பெரியகடைவீதி, நீலாகீழவீதி, நாணயக்கார வீதி, உள்ளிட்ட கடைகள் நிறைந்த பகுதிகளில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடும்பத்தினருடன் மக்கள் பொருள்களை வாங்க திரண்டனர்.

தேனியில் பகலில் வெயில் தாக்கம் அதிகம் இருந்ததால் கடைகளில் கூட்டம் குறைந்திருந்தது. இருப்பினும் மாலை நேரத்தில் சுற்றுவட்டார பகுதிகளான ஆண்டிபட்டி, போடி, கம்பம், பெரியகுளத்தில் இருந்து தேனியில் உள்ள ஜவுளிக்கடை, நகைக்கடைகளுக்கு குடும்பத்துடன் பொதுமக்கள் வந்திருந்தனர்.

மதுரை விளக்கு தூன், மேலமாசி வீதி, கீழ மாசி வீதி என நான்கு மாசி வீதிகளிலும், கீழ மாரட் வீதி, காமராஜர் சாலை உள்ளிட்ட அனைத்து முக்கிய வீதிகளிலும், மக்கள் குடும்பத்துடன் வந்து பொருள்களை வாங்கினர்.

நாமக்கல்லில் மோகனூர், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், கொல்லிமலை உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த பொதுமக்களும் ஆர்வத்துடன் தீபாவளி ஷாப்பிங்கில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் காந்தி வீதி, நேரு வீதி உள்ளிட்ட முக்கிய கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்திருந்தது. குறிப்பாக சண்டே பஜாரில் அனைத்து தரப்பினருக்கும் தேவையாக பொருட்கள் கிடைப்பதால் அங்கு கூட்டம் அலை மோதியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments