56 தங்கம் குவித்த தங்கமங்கை... காமன்வெல்த்தில் வெல்ல லட்சியம்

0 360

மாநில, மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் 56 தங்கப் பதக்கங்களையும், வெள்ளிப் பதக்கங்களையும் குவித்து சாதனை படைத்துள்ள ராமநாதபுரம் மாணவி ஐஸ்வர்யா, காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் வெல்வதே தனது லட்சியம் என்று தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார். 

ராமநாதபுரத்தைச்சேர்ந்த 16 வயது பிளஸ் ஒன் மாணவி ஐஸ்வர்யா. சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் தடகள விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டு, வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று முதலில் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றார். இதில் பதக்கங்களை குவித்த அவர் மாநில அளவிலான போட்டிகளிலும், தென்மாநில போட்டிகளிலும் பங்கு பெற்று தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்றுள்ளார்.

இரு வாரங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தென் மாநில தடகள போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ஐஸ்வர்யா, இதுவரை மொத்தம் 56 தங்கப்பதக்கம், 7 வெள்ளிப் பதக்கம், 5 வெண்கலப் பதக்கங்களுடன் ஏராளமான பாராட்டு சான்றுகளையும் பெற்றுள்ளார்.

மாணவி ஐஸ்வர்யாவின் சாதனையை அறிந்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆகியோர் நேரில் அழைத்து பாராட்டினர். இவரது தந்தை மோகன் காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். தங்களது குடியிருப்பு பகுதியில் நடந்த சுதந்திர தின விளையாட்டில் முதன் முதலில் குண்டு எறிதலில் வெற்றி பெற்றதாகவும், அதனைப் பார்த்த தோழிகளும், பெற்றோரும், ஊக்கப்படுத்தியதால் முறையாக பயிற்சி பெற்றதாகவும் தெரிவித்த ஐஸ்வர்யா,காமன்வெல்த் போட்டியில் நாட்டுக்கு பதக்கம் வெல்வதே லட்சியம் என தன்னம்பிக்கையுடன் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments