ராஞ்சி டெஸ்ட் போட்டியில், 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்களில் இந்திய அணி டிக்ளேர்...

0 389

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்களில் இந்திய அணி டிக்ளேர் ஆனது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா தனது முதல் இரட்டை சதத்தை விளாசினார். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்சை விளையாடியது. மயங்க் அகர்வால், புஜாரா, கேப்டன் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த ரகானேவும், ரோகித் சர்மாவும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் ரகானே சதம் அடித்தார்.

115 ரன்கள் எடுத்து ரகானே அவுட்டான நிலையில், ரவீந்திர ஜடேஜாவும், ரோகித் சர்மாவும் ஜோடி சேர்ந்தனர். அதிரடி காட்டிய ரோகித் சர்மா, 249 பந்துகளில் தனது முதலாவது இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

212 ரன்கள் எடுத்திருந்த போது ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்திருந்த போது அணியை டிக்ளேர் செய்வதாக கேப்டன் விராட் கோலி அறிவித்தார். இதை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குயிண்டன் டீ காக் மற்றும் டீன் எல்கர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இன்மை காரணமாக, இரண்டாவது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments