பாக். அத்துமீறல் - இந்தியாவின் அதிரடி பதிலடி

0 2602

எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிரான இந்தியாவின் பதிலடி தாக்குதலில், பயங்கரவாத பதுங்கு குளிகள் தகர்க்கப்பட்டு, தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் விவகாரத்தை பன்னாட்டு பிரச்சினையாக்க முயன்று தோற்ற பாகிஸ்தான், எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தி, தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய முயன்று வருகிறது. எல்லை அருகே பாகிஸ்தான் பயங்கரவாதிகள், 20 முகாம்கள் அமைத்து, இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக, உளவுத்துறையும் அண்மையில் எச்சரித்திருக்கிறது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் டாங்தார் மண்டலத்திற்குட்பட்ட குப்வாரா பகுதியில், பாகிஸ்தான் ராணுவம், இந்திய வீரர்களைக் குறிவைத்து அதிகாலையில் தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் இருவரும், பொதுமக்களில் ஒருவரும் உயிர்த்தியாகம் செய்தனர். மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் கொடுத்த கடுமையாக பதிலடியில், அந்த நாட்டின் ராணுவத்தினர் 5 பேர் வரை கொல்லப்பட்டனர். மேலும், குப்வாரா பகுதியையொட்டி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின், நீலம் பள்ளத்தாக்குப் பகுதியில் பயங்கரவாதிகளின் 4 பதுங்கு குழிகளை குறிவைத்து, இந்திய ராணுவம் சிறியவகை பீரங்கித் தாக்குதலை நடத்தியது.

இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதலில், 4 பயங்கரவாத பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டு, அங்கிருந்த பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், எத்தனை பயங்கரவாதிகள் பலியாகினர் என்பது உறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்து பேசிய இந்திய ராணுவ அதிகாரிகள், இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் உதவுவதை முறியடிக்கும் வகையில், கடும் பதிலடி கொடுக்கப்படுவதாக தெரிவித்தனர். 

இதற்கிடையே, இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்தை, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப்பகுதியில், தற்போதைய நிலைமை குறித்துக் கேட்டறிந்தார்.

மேலும், இருநாடுகளின் எல்லைப் பகுதியில் நிலவும் சூழல் குறித்து, தனிப்பட்ட முறையில் கண்காணித்து வரும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானின் அத்துமீறல், அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை உடனுக்குடன் தெரிவிக்குமாறும், ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்திடம், வலியுறுத்தியிருக்கிறார்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், அத்துமீறி தாக்கிய பாகிஸ்தான் படைகளுக்கு, தகுந்த பதிலடி கொடுத்த இந்திய பாதுகாப்பு படைக்கு பாராட்டு தெரிவித்தார். இந்திய ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்திய அவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள 3 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், உள்கட்டமைப்பை பெரிதும் சேதப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

இந்திய ராணுவத்தின் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 6 பேர் முதல் 10 பேர் வரை பலியாயினர் என்றும் அதே எண்ணிக்கையில் பயங்கரவாதிகளும் உயிரிழந்தனர் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த ஒரு மாதமாக எல்லையின் பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி நடைபெற்றது என்றும் பிபின் ராவத் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments