தீபாவளி ஸ்வீட்ஸ் கேன்சர் எச்சரிக்கை..! வண்ணமே வேணாம்

0 315

தீபாவளிக்கு கடைகளில் விற்கப்படும் இனிப்புகளில் வண்ணக் கலவைகள் கலப்பதை தவிர்க்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நாவிற்கு சுவையூட்டும் இனிப்பில் அழையா விருந்தாளியாக புற்றுநோயை வரவழைக்கும் ரசாயணம் கலக்கப்படும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

தீபாவளி என்றாலே பட்டாசுக்கு இணையாக நினைவுக்கு வருவது நாவிற்கு சுவையூட்டும் இனிப்பு மற்றும் பலகார வகைகள் தான்..! முன்பெல்லாம் தீபாவளிக்கு 4 நாட்களுக்கு முன்பாகவே தீபாவளி பலகாரம் செய்யும் பணிகள் வீடுகளில் துவங்கும், முறுக்கு, சீடை, அதிரசம், ரவாலட்டு,பொரி விளங்கா உருண்டை போன்றவற்றை முன்கூட்டியே செய்து பாட்டில்களிலும், டப்பாக்களிலும் அடைத்து வைத்து தங்கள் குழந்தைகளுக்கு ருசிக்க கொடுப்பது வழக்கம்.

நம் மக்கள் வீட்டில் பலகாரம் செய்வதை நிறுத்தி கடைகளை நாடிச்செல்ல தொடங்கிய பின்னர், அவர்களுக்கு அழையா விருந்தாளிகளாக பலவித நோய்களும் சேர்ந்தே வந்து விடுவதாக எச்சரிக்கின்றனர் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்.

கடைகளில் இருந்து வாங்கப்படும் பாலினால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளாக இருந்தால், அவை தயாரிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக சாப்பிட்டு முடித்துவிட வேண்டும், அதே போல சர்க்கரைபாகு, கடலை மாவு வகைகளில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களில் வசீகரிக்கும் தோற்றத்திற்காக பல வண்ண ரசாயணப் பொருட்கள் சேர்க்கப்படுவதால் அவை மெல்லக் கொல்லும் விஷமாக மாறிப்போயிருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய வண்ணங்களுக்காக தட்ராசின், கார்மோசின் ஆகிய ரசாயண பொடிகளை 100 பிபிஎம் அளவுக்கு அதிகமாக கலந்தால் அந்த உணவுப் பொருள் நச்சுப்பொருளாய் மாறிவிடும் என்று எச்சரிக்கும் உணவுப் பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் சிவப்பாக இருக்கும் ஜாங்கிரியை ருசிப்பதை தவிர்த்துவிட வேண்டுகின்றனர்.

எந்த இனிப்பு வகையாக இருந்தாலும் நிறம் குறைந்த பலகாரங்களையே வாங்கி உண்ண பரிந்துரைக்கின்றனர். அதேபோல கார வகைகளில் வத்தல் பொடி, மஞ்சள் பொடி, மசாலா பொடி தவிர்த்து, நிறத்துக்காக வேறு எந்த ஒரு வண்ண பொடிகளும் கலக்க கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒவ்வொரு இனிப்பு கடையிலும், இனிப்பை தயாரித்தவரின் உடல்நிலை குறித்த மருத்துவர் சான்று மற்றும் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் குறித்த விவரங்களை வாடிக்கையாளர்களுக்குத் தெரியும் வகையில் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

குறிப்பாக இனிப்புக் கடைகளில் பரிமாறப்படும் உணவுப் பொருட்களை வெறும் கையால் எடுத்து பார்சல் செய்யக்கூடாது என்றும் அனுமதிக்கப்பட்ட பிளாஸ்டிக் கையுறை கொண்டே இனிப்புகளை எடுத்து அளவீடு செய்ய வேண்டும் என்றும், கலப்பட உணவு குறித்து எச்சரித்துள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் உணவுக் கலப்படம் குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

நாவிற்கு மட்டுமல்ல உடலுக்கும் நலன் பயக்கும் வகையிலான இனிப்பு மற்றும் காரவகைகளை உண்போம் உடல் நலத்தை காப்போம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments