பேருந்தை நிறுத்திய சிங்கப்புள்ளீங்கோ..! சில்லரை பிரச்சனையால் ஆவேசம்

0 745

சென்னை மாநகர பேருந்தில் டிக்கெட்டுக்கு உரிய பணம் இல்லாமல் காதலனுடன் பயணித்த இளம் பெண் ஒருவர், அவதூறாக பேசிய நடத்துனரை கண்டித்து பேருந்தின் கியரை பிடித்து இழுத்து பேருந்தை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

நொச்சிக்குப்பத்தை சேர்ந்த பூஜா என்பவர் பட்டினப்பாக்கத்தில் இருந்து வில்லிவாக்கம் புறப்பட்ட 27 டி என்ற மாநகர பேருந்தில் தனது காதலனுடன் பயணித்துள்ளார்.

காதலனிடம் பணம் இருக்கும் என்று பூஜா நினைத்திருந்த நிலையில் நடத்துனர் பயணச்சீட்டு எடுக்க சொன்ன போது காதலன் கையில் டெபிட் கார்டு மட்டுமே இருந்துள்ளது. பூஜாவோ தன்னிடம் 20 ரூபாய் மட்டும் தான் இருப்பதாக கூறி உள்ளார். 2 டிக்கெட் கட்டணம் 30 ரூபாய் என்ற நிலையில் 10 ரூபாய் குறைந்ததால் அவரது காதலன் பேருந்தில் இருந்து இறங்குவதாக கூறியுள்ளார்.

பேருந்தின் கதவை திறக்க மறுத்த நடத்துனரோ, காதலனுடன் ஊர் சுற்ற தெரியுது, கையில காசில்லாமல் மாநகர பேருந்தில் ஏறக்கூடாதுன்னு தெரியாதா என்று ஆரம்பித்து பிச்சைக்காரி என்பது போல எல்லாம் அவதூறாக பேசி அனைத்து பயணிகள் முன்னிலையிலும் அந்த பெண்ணை இழிவுபடுத்தியதாக கூறப்படுகிறது.

இடையில் ஒரு நிறுத்தத்தில் கதவு திறக்கப்பட்ட நிலையில் ஓடும் பேருந்தில் இருந்து இறங்கிய காதலன், அருகில் இருந்த ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டு ஆட்டோ பிடித்து மீண்டும் அதே அரசு பேருந்தில் பணத்துடன் ஏறி டிக்கெட் கட்டணத்துக்கு 500 ரூபாய் நோட்டை நீட்டியுள்ளார். இதனால் நடத்துனர் மீண்டும் கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஆவேசம் அடைந்த பூஜா, தைரியமாக ஓட்டுனரிடம் சென்று பேருந்தின் கியரை பிடித்து இழுத்து டிடிகே சாலையில் பேருந்தை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பூஜா, கியரை கெட்டியாக பிடித்துக் கொண்டதால் ஓட்டுனரால் பேருந்தை இயக்க இயலவில்லை. பேருந்து காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறி ஆவேசமான பூஜா தனக்கு நேர்ந்த அவமானத்தை விவரித்தார்.

வாகன போக்குவரத்து மிகுந்த டிடிகே சாலையில் நடுவழியில் பேருந்து நிறுத்தப்பட்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து பேருந்தை சாலையோரம் நிறுத்த அறிவுறுத்தினர்

பயணச்சீட்டுக்கு உரிய சில்லரை இன்றி பேருந்தில் பயணித்ததால் தான் சத்தம் போட்டதாகவும், அவரை இழிவாக பேசவில்லை என்றும் நடத்துனர் காவல்துறையினரிடம் விளக்கம் அளித்தார். சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக காவல் நிலையத்தில் பேருந்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

சென்னை மாநகர பேருந்தில் நடத்துனர்கள், பயணிகளிடம் மரியாதையாக நடந்து கொள்வதில்லை என்பது நீண்ட கால குற்றச்சாட்டாக பார்க்கப்பட்டாலும், இந்த சம்பவத்தில் அந்த பெண்ணின் பயணச்சீட்டுக்கு அருகில் இருந்தவர் 10 ரூபாய் கொடுத்து உதவ முயன்ற நேரத்தில் அதனை ஏற்காமல், அந்த பெண்ணை வக்கிரமாக பேசி இழிவுபடுத்திய நடத்துனரின் செயல் கண்டிக்கதக்கது என்கின்றனர் சக பயணிகள்..!

பேருந்தில் ஏறும் முன்பு டிக்கெட்டுக்கு பணம் இருக்கிறதா என்று சரிபார்த்து கொள்வது பயணிகளுக்கு நல்லது. பயணிகளிடம் நடத்துனர்கள் நாவை அடக்கி பேசினால் இது போன்ற பிரச்சனைகள் மீண்டும் வராது என்கின்றனர் காவல்துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments