அனல் பறக்கும் இறுதிகட்ட பிரச்சாரம்..!

0 260

நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் இறுதிகட்ட பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பாளையங்கோட்டை ஒன்றியத்தில் சீவலப்பேரி உள்ளிட்ட பகுதிகளில், அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அவர், அங்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட ஆசிரியர் காலனியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், எதிர்க்கட்சி தலைவரின் திண்ணைப்பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது எனக் கூறினார்.

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட அசோகபுரி, ஈச்சங்குப்பம் பகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார்.

அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலை முறையாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியே தாங்கள் வழக்கு தொடர்ந்ததாக தெரிவித்தார்.  கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் உயிருடன் இருந்த போது நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்கவில்லை எனக் கூறிய ஸ்டாலின், அவர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று நீட் தேர்வுக்கு தடையாணை பெற்றனர் எனவும் சுட்டிக்காட்டினார். 

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் வகையில் அக்கட்சி சார்பில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற பேரணியில் அமைச்சர்கள், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பேரணியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ததால், இடைத்தேர்தல் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணாநகர் பகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவருடன் கூட்டணி கட்சியான அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் உள்ளிட்டோரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, புதுச்சேரி மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், எனவே தங்களது வெற்றி உறுதியானது எனவும் தெரிவித்தார்.

சத்ய பிரதா சாஹு:

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் 1 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்புடைய பணம், நகை, மதுபானங்கள் இதுவரை கைப்பற்றப்பட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியபோது, இடைத் தேர்தலை சுமூகமாக நடத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருப்பதாகவும், தேர்தல் பார்வையாளர்கள் இன்று முதல் பணிக்கு அமர்த்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இருதொகுதிகளிலும் 56 லட்சம் ரூபாய் ரொக்கம், 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள், 3.6 லட்சம் வெள்ளி பரிசு பொருட்கள், 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான இதர பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாங்குநேரியில் 2.87 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் திமுக எம்எல்ஏ சரவணனுக்கு தொடர்பு இருப்பதாக கருதப்படும் நிலையில், மாவட்ட ஆட்சியரிடம் பெறப்பட்ட அறிக்கை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். நாம் தமிழர் தலைவர் சீமானின் சர்ச்சை பேச்சு குறித்தான அறிக்கையை மாவட்ட ஆட்சியர்  இன்று மாலைக்குள் அளிக்கவுள்ளதாகவும் சாஹு கூறினார். 

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காடு, மஞ்சுவிளை, பத்மநேரி பகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜ நாராயணனுக்கு ஆதரவாக அக்கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பியவாறு வீதி வீதியாக சென்ற நாம் தமிழர் கட்சியினர், வீடுகள், கடைகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாகவும் வாக்காளர்கள் தவறாமல் வந்து வாக்களிக்க வேண்டும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர் சிங் கேட்டுக்கொண்டார். புதுச்சேரி தலைமை செயலகத்தில் அமைந்துள்ள காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் கண்காணிப்பு அலுவலகத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். தேர்தல் நாளன்று தொகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் என அனைத்துக்கும் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். தேர்தல் தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் பதிவு செய்ய 1950 என்ற எண் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சுர்பீர் சிங் தெரிவித்தார்.

விஜயகாந்த்:

விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்த், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சார வாகனத்தினுள் அமர்ந்தபடி அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு விஜயகாந்த் சில விநாடிகள் பேசினார். இதனை பார்த்து அங்கு கூடியிருந்த தேமுதிக தொண்டர்கள், உற்சாக முழக்கங்களை எழுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments