இறுதி கட்ட பிரச்சாரத்தில் மகாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்ற தேர்தல்

0 192

வரும் அக்டோபர் 21ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வதால், அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 21ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து களம் காணும் நிலையில், பிரதான எதிர்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சிகள் கைகோர்த்து தேர்தலை சந்திக்கின்றன.

ராஜ்தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதுதவிர பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி, பகுஜன் சமாஜ், ஐதராபாத் எம்.பி. அசாதுதின் ஒவைசியின் எம்.ஐ.எம். ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளன.

இதேபோல் 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவிலும் 21ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆளும் கட்சியான பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இரு மாநிலங்களிலும் கடந்த சில தினங்களாக பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனல்பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

நாளை மறுநாள் வாக்குப்பதிவு என்பதால், இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களது இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து வரும் 21ம் தேதி திங்கட்கிழமை வாக்குப்பதிவும், 24ம் தேதி வாக்கு எண்னிக்கையும் நடைபெறவுள்ளது. 

இதனிடையே சதாரா தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தவாறு தொண்டர்களிடையே உரையாற்றினார்.

80 வயது முதிய தலைவரான சரத்பவார் மழையில் நனைந்தபடி தேர்தல் பிரச்சாரம் செய்ததே அந்த மாநில தேர்தலின் தீவிரத்தை உணர்த்துவதாக இருக்கிறது என அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments