200 கோழிகளும் வெடிகுண்டு மிரட்டலும்..! வில்லேஜ் விஞ்ஞானி கைது

0 428

200 கோழிகளுக்கு இரையாக ரேசன் அரிசி கொடுக்காத கடத்தல்காரரை போலீசில் சிக்க வைக்க, ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவசாயி ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் சந்திப்பு ரெயில் நிலைய கோட்ட மேலாளர் சுப்பாராவுக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில் ரெயில் நிலையத்தை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்து எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து ரெயில் நிலையம் முழுவதும் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முகவரியை வைத்து நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் மின்னக்கல் பகுதியை சேர்ந்த அரிசி வியாபாரி மணிவேல் என்பவரை பிடித்து விசாரித்தனர்.

இதில், அவருக்கு வேண்டாத நபர் யாரோ மிரட்டல் கடிதம் எழுதி மணிவேலின் பெயரை குறிப்பிட்டுள்ளதை கண்டறிந்தனர். அண்மையில் மணிவேலிடம் சண்டையிட்டு சென்றவர்களின் பட்டியலை தயாரித்தபோது, ரேசன் அரிசி தராத ஆத்திரத்தில் கோழி வளர்க்கும் விவசாயியான ரவிக்குமார் என்பவர் மணிவேலிடம் சண்டையிட்டு சென்றதும், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதில் இருந்து அவர் தலைமறைவாக இருப்பதும் தெரிய வந்தது .

இதையடுத்து அவரை மடக்கி பிடித்து விசாரித்தபோது வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஏன் என்பது வெளிச்சத்திற்கு வந்தது. அந்த பகுதியில் 200 கோழிகளை வளர்த்துவரும் விவசாயி ரவிக்குமார், தனது கோழிகளுக்கு தீவனமாக ரேசன் அரிசியைப் பயன்படுத்தி வந்துள்ளார். அந்த அரிசியை மணிவேலிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.

ரேசன் கடையில் இருந்து அரிசியை மொத்தமாக கடத்தி கேரளாவுக்கு அனுப்பி வந்த மணிவேல், ரவிக்குமாரிடம் அரிசி இல்லை என்று மறுத்ததாக கூறப்படுகின்றது. அரிசி கடத்தல் தொடர்பாக பல முறை கைது செய்யப்பட்டுள்ள மணிவேலை மீண்டும் போலீசில் சிக்க வைக்க ரவிக்குமார் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி ரேசன் அரிசிக்காக புகார் செய்தால் எளிதில் தப்பி வந்து விடுவார் என்பதால், வெடிகுண்டு வழக்கில் சிக்கவைப்பதற்காக மிரட்டல் கடிதம் எழுதி அதில் மணிவேல் பெயரை குறிப்பிட்டு அனுப்பியது தெரியவந்தது.

வழக்கமாக இதுபோன்ற மிரட்டல் கடிதங்களில் எந்த ஒரு முகவரியும் இருக்காது, ஆனால் இதில் மணிவேலின் முகவரி மிகத்தெளிவாக இருந்ததால் இதன் பின்னணியில் ஏதாவது மோசடி வேலைகள் இருக்கும் என்று சந்தேகித்த காவல்துறையினர், தனிப்படை அமைத்து 20 நாட்களுக்கு மேலாக விசாரித்து சாமர்த்தியமாக துப்பு துலக்கி "வில்லேஜ் விஞ்ஞானி" ரவிக்குமாரை கைது செய்தனர்.

காவல்துறையினரின் கண்ணியமிக்க நேரத்தை இதுபோன்ற அவதூறு மிரட்டல் விடுத்து வீணடித்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சான்றாக நிகழ்ந்திருக்கின்றது இந்த சம்பவம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments