நீலகிரியில் தொடரும் மண்சரிவு அபாயம்

0 187

நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு அந்த மாவட்டத்தில் கனமழை தொடரும் என்பதால் மேலும் 238 இடங்களில் மண் சரியும் அபாயம் உருவாகி உள்ளது.

கடந்த ஒரு ஒருவாரமாக நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் பல இடங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 தாலுகாக்களில் குன்னூர், ஊட்டி, குந்தா, கோத்தகிரி ஆகிய நான்கு தாலுகாக்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. 

குன்னூர் - ஊட்டி இடையிலான சாலையிலும் குன்னூர் - கோத்தகிரி இடையிலான நெடுஞ்சாலையிலும் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் இந்த சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உதகை - மேட்டுப்பாளையம் , குன்னூர் - மேட்டுபாளையம் சாலைகளில் 18 இடங்களில் மண்ணும், பாறையும் சரிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து சரி செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.ஊட்டி மஞ்சூர் சாலையில் குந்தா அருகே ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பல ஊர்களில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதில் குன்னூர், ஊட்டி, குந்தா, கோத்தகிரி தாலுகாக்களில் சுமார் 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.குன்னூரில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் கார் மற்றும் இரு சக்கர வாகனம் மண்ணில் புதைந்தது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த காய்கறிப் பயிர்களும் நீரில் மூழ்கின. 

இதனிடையே அடுத்து வரும் 5 நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடருமென வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது. மாவட்டத்தில் 238 இடங்களில் மண் சரியும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் கண்டறிந்து உள்ளனர். இதையடுத்து மீட்பு பணிக்குழுகளை அமைத்தும், ஜேசிபி உள்ளிட்ட எந்திரங்களை தயார் படுத்தியும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments