10 ஆண்டுகளாக சீரமைக்காத சாலை - மழைநீர் குட்டையாக மாறிய அவலம்
சென்னை திருவொற்றியூரை அடுத்த விச்சூரில் ஏராளமான கண்டெய்னர் வாகனங்களும், கனரக வாகனங்களும் செல்லும் சாலை, 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நிலையில், மழைநீர் தேங்கி குட்டைபோல் காட்சி அளிக்கிறது.
திருவொற்றியூர் அருகே உள்ளது விச்சூர். தொழிற்சாலைகள் நிறைந்த இப் பகுதியில் இரும்பு குடோன்கள், கண்டெய்னர் சரக்குப் பெட்டக நிலையங்கள் அதிகம் உள்ளன. எண்ணூர் துறைமுகம் மற்றும் சென்னை துறைமுகம் செல்லும் கண்டெய்னர் வாகனங்கள், இப்பகுதியில் உள்ள நிலங்களில் சரக்கு பெட்டக நிலையங்கள் அமைத்து நிறுத்தி வைக்கப்படுகின்றன.
தினமும் நூற்றுக்கணக்கான கண்டெய்னர் வாகனங்களும், கனரக வாகனங்களும் எண்ணூர் துறைமுக பிரதான சாலையில் இருந்து பிரிந்து 3 கிலோமீட்டர் தூரத்துக்கு விச்சூர் சாலையில் செல்கின்றன.
இதனால் விச்சூரில் உள்ள நடேசன் சாலை, மற்றும் கணபதி சாலையில் 3 கிலோமீட்டர் தூரத்துக்கு ஆங்காங்கே மேடு பள்ளமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் சாலையின் நடுவில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு சமீபத்தில் பெய்த மழையால், மழைநீர் குட்டை போல் தண்ணீர் தேங்கி உள்ளது.
இந்த பள்ளத்தில் வாகனங்கள் ஏறி இறங்கி அசைந்தாடி சிரமப்பட்டு செல்லும் அவல நிலை உள்ளதாகவும், சாலையை சீரமைக்க கோரி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களும், பள்ளி செல்லும் குழந்தைகளும் தினமும் அவதிப்படுவதாகவும், பருவமழை தீவிரம் அடையும் முன் சாலையை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments