அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் விளைவாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக சரிவு

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் விளைவாக, கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சி மூன்றாவது காலாண்டில் 6 சதவீதமாக சுருங்கியுள்ளது.
நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சீனாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.2 சதவீதமாக இருந்தது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் இது 6 சதவீதமாக குறைந்துள்ளது. சீனா நடப்பு நிதியாண்டுக்கு 6 முதல் 6.5 சதவீதம் என்ற அளவுக்கே பொருளாதார வளர்ச்சி இலக்கை நிர்ணயித்துள்ளது.
இருப்பினும், மூன்றாவது காலாண்டில் ஏற்பட்ட சரிவு, 1992ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனாவின் மிகக்குறைவான காலாண்டு பொருளாதார வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு இடர்ப்பாடுகளும், சவால்களும் உள்ளன என்றும், இருப்பினும் தேசிய பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக நிலைத்தன்மையோடு இருப்பதோடு வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதாகவும் சீனாவின் தேசிய புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.
Comments