இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் இளம் பெண் பட்டதாரி

0 385

ஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பட்டதாரிப் பெண் ஒருவர் தாம் பார்த்து வந்த தனியார் வேலையை உதறிவிட்டு சொந்த கிராமத்துக்கு வந்து இயற்கை விவசாயம் மேற்கொண்டு கவனம் ஈர்த்து வருகிறார். 

கல்லணையை அடுத்த பாதிரக்குடி கிராமத்தைச் சேர்ந்த குறிஞ்சி மலர் என்ற அந்தப் பெண், உயிரி தொழிட்நுட்பம் முடித்து, சென்னையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கைநிறைய சம்பளத்துடன் வேலை பார்த்து வந்துள்ளார்.

புத்தகங்கள் வாசிப்பதிலும் இணைய செய்திகளை வாசிப்பதிலும் ஆர்வம் கொண்ட குறிஞ்சி மலருக்கு இயற்கை விவசாயம் தொடர்பான செய்திகள் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அது தொடர்பான தேடலில் இறங்கியவருக்கு இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வாரின் காணொளிகளும் ஓய்வுபெற்ற ஆசிரியர் ராஜாம்பாள் உட்பட மேலும் சிலரின் ஆலோசனைகளும் உதவி புரிந்துள்ளன.

அதன் விளைவாக வேலையை உதறித்தள்ளிவிட்டு சொந்த ஊரான பாதிரக்குடி வந்தவர், இயற்கை விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். ஆரம்ப கட்டத்தில் அவரை கிண்டல் செய்த கிராமத்தினர், அவரது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் பார்த்து ஒத்துழைப்பு கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

முன்னதாக காய்கறிகள், கீரைகள் உள்ளிட்டவற்றை இயற்கை விவசாய முறையில் பயிரிட்டு வந்தவர், தற்போது ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலத்தில் மரக்கன்றுகளை நட்டுள்ளார். மரகன்றுகளை “குழந்தைகள்” என்று குறிப்பிடும் குறிஞ்சி மலர், இயற்கை முறையில் அவற்றை பராமரிப்பது குறித்தும் விளக்குகிறார்.

மரக்கன்றுகள் வளர்ந்தபின் அவற்றின் இடையே ஊடுபயிர்களாக மிளகை பயிரிட உள்ளதாகக் கூறும் குறிஞ்சி மலர், தர்பூசணி, வெள்ளரிக்காய், கடலை உள்ளிட்டவற்றையும் ஊடுபயிராக பயிரிடலாம் என்கிறார்.

மண்ணின் தன்மையை அறிந்து விவசாயம் மேற்கொண்டால் நிச்சயமாக நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறும் குறிஞ்சி மலர், தன்னைப் போன்ற இளம் தலைமுறையினரை குறைந்த பட்சம் நேரம் கிடைக்கும்போதோ, விடுமுறை கிடைக்கும்போதோ கூட இயற்கை விவசாயத்தில் ஈடுபட வருமாறு அழைப்பு விடுக்கிறார்.

“கிடைத்த வேலையை செய்யாமல் பிடித்த வேலையை செய்ய வேண்டும்” என்று சொல்வார்கள். அதனை நடைமுறைப்படுத்தி வரும் குறிஞ்சி மலர் போன்ற பெண்கள், எதிர்காலத் தலைமுறை மீது நம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments