கேரளாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி விவகாரம் - சென்னையில் கட்டுமான நிறுவனத்தின் தலைமையகத்தில் சோதனை

0 370

கேரளாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை மோசடி செய்து விற்பனை செய்த விவகாரத்தில், சென்னையில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் தலைமையகத்தில் கேரள போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் கொச்சி அருகே, மரடு பஞ்சாயத்து பகுதியில் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளை மீறி கட்டப்பட்ட 4 அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதேபோன்று கொச்சி நெட்டூர் பகுதியில் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியின்றி கட்டப்பட்ட ஜெயின் கோரல் க்ரோவ் என்ற அடுக்கு மாடி குடியிருப்பை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

விதிகளை மீறிய கட்டுமான நிறுவனங்கள், அதற்கு அனுமதி அளித்த கேரள அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன் அடிப்படையில் கேரள மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மரடு பஞ்சாயத்து பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பை கட்டிய கட்டுமான நிறுவனர் சானி ஃபிரான்சிஸ் மற்றும் விதிகளை மீறி அனுமதி அளித்த இரண்டு அரசு அதிகாரிகளை கைது செய்தனர்.

நெட்டூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பை கட்டிய ஜெயின் ஹவுசிங் கன்ஸ்ட்ரக்சன் மீதும் கேரள மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், கேரள தனிப்படை போலீசார் சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள ஜெயின் ஹவுசிங் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

வழக்கு விவகாரம் தொடர்பாக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்களையும் கேரள போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஜெயின் ஹவுசிங் கன்ஸ்ட்ரக்சன் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரையும் கைது செய்ய கேரள போலீசார் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments