ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

0 372

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 

2007ஆம் ஆண்டில், இந்திராணி-பீட்டர் முகர்ஜி தம்பதிக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகளை திரட்டியது. இதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இருந்த அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் விதிகளை மீறி முறைகேடாக அனுமதி வழங்கியதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

இந்த விவகாரத்தில், மகன் கார்த்தியின் வலியுறுத்தலின்பேரில், மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் முறைகேட்டிற்கு உதவியதாகவும், இதற்கு பிரதிபலனாக கார்த்திக்கு லஞ்சப் பணம் மறைமுக வழிகளில் கைமாறியுள்ளது என்பதும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டாகும்.

மகள் ஷீனா போரா கொலை வழக்கில் தற்போது சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜி, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஜூலையில் அப்ரூவராக மாறினார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்திய சிபிஐ, கடந்த மாதம் 21ஆம் தேதி சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தது. தற்போது ப.சிதம்பரம், அமலாக்கத்துறை காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி உள்ளிட்ட 14 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளன. குற்றப்பத்திரிக்கையை டெல்லி நீதிமன்றம் வரும் 21ஆம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments