நடப்பு ஆண்டில் 5ஆவது முறையாக முழு கொள்ளவை எட்டிய பில்லூர் அணை - வெள்ள அபாய எச்சரிக்கை

0 386

கோவை மாவட்டம் பில்லூர் அணை நடப்பு ஆண்டில் 5ஆவது முறையாக முழு கொள்ளவை எட்டி உள்ளது. பாதுகாப்பு கருதி வினாடிக்கு 30,000 கன அடி நீர் திறக்கப்படுவதால், பவானி ஆற்றங் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பில்லூர் அணை அமைந்துள்ள மேற்குதொடர்ச்சி மலை காடுகளில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மொத்த நீர்தேக்கு உயரமான 100 அடியில், 98 அடிக்கு நீர் நிரம்பியதால், பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் விநாடிக்கு 30,000 கன அடி நீர் முழுவதும் அப்படியே நான்கு மதகுகள் வழியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

பில்லூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நீலகிரியிலும் மழை நீடித்து வருவதால், நீர்வரத்து அதிகரிக்கும்போது, நீர்வெளியேற்றமும் அதிகரிக்கப்படும். எனவே, வருவாய்த்துறை சார்பில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. கரையோர மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணிதுவைக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து, கரையோரம் உள்ள குடியிருப்புகளுக்கு சென்று, பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

பில்லூர் அணை இந்த ஆண்டு ஜந்தாவது முறையாக நிரம்பியுள்ளதால், அதன் உபரி நீர் பவானி ஆற்றின் வழியே பவானிசாகர் அணைக்கு சென்றடைகிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர் மட்டமும் கிடுகிடுவென உயந்து வருகிறது.

பவானிசாகர் செல்லும் வழியில் உள்ள லிங்காபுரம் காந்தையாற்றின் குறுக்கே உள்ளே உயர்மட்ட பாலம் மூழ்கி உள்ளதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பரிசலில் பயணித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments