பேச்சு பேச்சா தான் இருக்கனும்... தம்பதியருக்கு டார்ச்சர்...! சமூக சேவகருக்கு தர்ம அடி

0 405

ரோட்டில் தொண்டு நிறுவனம் நடத்தி இளம் பெண்களை மயக்கி அத்துமீறலில் ஈடுபட்டு வந்த போலி சமூக சேவகர் சென்னையில் புதுபெண்ணை காரில் கடத்த முயன்ற போது சிக்கினார்.

ஈரோடு மாவட்டம் தொராயன்மலை அடுத்த சென்னிமலையை சேர்ந்தவர் தங்கமணி. இவர் சுபாஷ் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்திவருவதாக கூறி ஏராளமான இளம் பெண்களை தனது வாட்ஸ் ஆப் குழுவில் இணைத்துள்ளார்.

தங்கமணிக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ள நிலையில், தனது வீட்டின் அருகே வசித்து வந்த பெண்ணை தனது தொண்டு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு தருவதாக கூறி வேலைக்கு வைத்துள்ளார். மேலும் அந்த பெண்ணை தனது தொண்டு நிறுவன வாட்ஸ் ஆப் குழுவில் இணைத்த தங்கமணி, அவரது நலனில் மிகுந்த அக்கறை விரும்பிபோல காட்டிக் கொண்டு அவரிடம் நீண்ட நேரம் பேசி மெஸ்மரிசம் செய்யும் வேலைகளை செய்துள்ளார்.

இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், சென்னை பொன்னியம்மன் மேட்டை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த பெண் திருமணம் முடிந்து ஈரோட்டில் இருந்து சென்று விடக்கூடாது என்று திட்டமிட்ட தங்கமணி, மணமகனை பற்றி பெண் வீட்டுக்கும், மணமகளை பற்றி மாப்பிள்ளை வீட்டுக்கும் அவதூறு தகவல்களை போன் மூலம் தெரிவித்துள்ளார்.

அதையும் மீறி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருவருக்கும் திருமணம் முடிந்து அந்த பெண் தனது கணவன் வெங்கடேசனுடன் சென்னைக்கு குடிவந்து விட்டார். இருந்தாலும் தினமும் இரவு நேரத்தில் அந்த பெண்ணுடன் நீண்ட நேரம் செல்போனில் பேசி கணவன் மனைவிக்கு இடையே தாம்பத்தியம் நிகழாமல் தடுத்து வந்துள்ளார் தங்கமணி.

ஒரு கட்டத்தில் ஏமாற்றம் அடைந்த கணவன் வெங்கடேசன் தனது புதுமனைவியை கண்டித்துள்ளார். தங்கமணியின் செல்போன் அழைப்பை ஏற்காமல் அந்த பெண் நிராகரித்தாலும் தங்கமணியின் மெஸ்மரிச வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு கணவனுடன் இல்லறத்தில் ஈடுபட்டதில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த வாரம் சென்னை வந்த தங்கமணி, தன்னை அந்த பெண்ணுக்கு அப்பா மாதிரி என்று கூறி கணவரையும் சமரசம் செய்துள்ளார். பின்னர் இருவரையும் தேனிலவுக்கு அழைத்து செல்வதாக ஆசைவார்த்தை கூறி காரில் கூட்டிச்சென்றுள்ளார்.

சென்ற இடத்தில் கணவர் வெங்கடேசனை காரில் விட்டு விட்டு அந்த பெண்ணை மட்டும் பேசுவதற்காக தங்கமணி, தனியாக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் வெறுத்துபோன வெங்கடேசன் தனது புது மனைவியை அழைத்துக் கொண்டு ஊருக்கு திரும்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் வியாழக்கிழமை தனது கூட்டாளி பாலாஜி என்பவருடன் காரில் வந்த தங்கமணி, வீட்டில் இருந்து அந்த பெண்ணை வெளியே வரச்செய்துள்ளார். அப்போது எதிர்பாராத நேரத்தில் காருக்குள் தள்ளி அவரை கடத்திச்செல்ல முயன்றுள்ளார். இதனை பார்த்த கணவரின் உறவினர்கள் ஆத்திரத்தில் தங்கமணியின் காரை சுற்றிவளைத்து மடக்கி உள்ளனர். தங்கமணியையும் அவரது ஓட்டுனர் பாலாஜியையும் காருடன் மாதவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

காவல்துறையினரின் விசாரணையில் இளம் பெண்களுடன் ஜொள்ளு விட்டு பேசும் பழக்கத்திற்கு அடிமையான தங்கமணி, போலியாக தொண்டு நிறுவனம் நடத்திக் கொண்டு 100 க்கும் மேற்பட்ட பெண்களுடன் வாட்ஸ் ஆப்பில் பேசி வந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். கடத்தல் வழக்கு பதிவு செய்து அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட தங்கமணி, பாலாஜி ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

பெண்கள் தங்களிடம் பழகும் ஆண்கள் வயதில் மூத்தவராக இருந்தாலும் அவர்களது நடவடிக்கைகளை உணர்ந்து விலகிக்கொள்வது நல்லது. இல்லையேல் இது போன்ற விபரீதங்களுக்கு வழிவகுத்துவிடும் என்கின்றனர் காவல்துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments