நூதன திருட்டும் ஆன்லைன் விளையாட்டும்.. மோசடி கும்பலின் திட்டம்..!

0 618

சென்னையில் போலி கால் செண்டர் நடத்தி கோடிக்கணக்கில் பொதுமக்கள் பணத்தை சுருட்டிய கும்பல், போலீசாரிடம் சிக்கினாலும் பணத்தை பறிமுதல் செய்வதை தடுக்க ஆன்லைன் விளையாட்டில் இழந்தது போல் பரிவர்த்தனை செய்து பதுக்கியுள்ளனர்.

சென்னையில் போலியாக கால் சென்டர் நிறுவனம் நடத்தி  வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்த 12 பேரை கடந்த இரு தினங்களுக்கு முன்பு மத்திய குற்ற போலீசார் கைது செய்தனர்.

சென்னை சித்தாலப்பாக்கத்தில் ஃபீனிக்ஸ் கால் சென்டர் என்ற பெயரில் கடந்த ஆறு மாத காலமாக செயல்பட்டு வந்த இந்த நிறுவனத்தின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு வங்கி கணக்கு உள்ளிட்ட விவரம் அனுப்பிய வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து திருடியுள்ளனர்.

இந்த கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதுவரை சுமார் ஆயிரத்து 500 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியுள்ளது அம்பலமாகியுள்ளது. 

என்றோ ஒரு நாள் சிக்குவோம், அப்படி சிக்கினால் போலீசாரிடம் இருந்து மோசடி செய்து சுருட்டிய பணத்தை எப்படி காப்பாற்றுவது என திட்டம் போட்டு இந்த கும்பல் செயல்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 3 மாதங்களுக்கு முன் ஹைதராபாத்தில் இதே போன்று போலி கால் சென்டர் நடத்திய பலர் சிக்கினர். ஏற்கனவே அந்த கும்பலில் வேலை பார்த்து இந்த நூதன மோசடியை சிக்காமல் செய்வது எப்படியென கற்று கொண்டு, சென்னையில் போலி கால் சென்டர் துவங்கியதாக கைதான மணிகண்டன் என்பவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து சுருட்டியப் பணத்தை ஒரே வங்கி கணக்கில் வைத்தால், போலீசார் சுலபமாக கண்டுப்பிடித்து விடுவார்கள் என்பதால் அந்த பணத்தை பல பணவர்த்தனை செயலிகள் மூலம் வெவ்வேறு வங்கி கணக்கிற்கு மாற்றியதாகவும் கும்பல் தலைவன் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

அந்த பணத்தை வைத்து ரம்மி சர்க்கல், ப்ளே கேம்ஸ் போன்ற ஆன்லைன் விளையாட்டில் செலுத்தி இழந்தாலும், எதிரில் விளையாடி பணத்தை அள்ளும் நபர் இந்த மோசடி கும்பலை சேர்ந்தவராக இருந்துள்ளார்.

இதன் மூலம் போலீசார் விசாரணையில் சிக்கினால் பணத்தையெல்லாம் ஆன்லைன் விளையாட்டில் இழந்துவிட்டதாக கூறி பணத்தை காப்பாற்றிவிடலாம் என்றும், வழக்கில் இருந்து வெளியில் வந்து சொகுசாக வாழலாம் எனவும் திட்டம்போட்டுள்ளனர். ஆனால், போலீசாரின் வேறு மாதிரியான விசாரணையிலும், சைபர் போலீசார் உதவியுடன் நடத்திய ஆய்வின் மூலமாகவும் மோசடி கும்பலின் திட்டம் தவிடிப்பொடியாகிவிட்டது.

பொதுமக்களின் கோடிக்கணக்கிலான பணத்தை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார், பரிவர்த்தனை செயலிகள், ஆன்லைன் விளையாட்டுகளில் பரிமாற்றப்படும் பணத்தை கண்காணிக்கவோ, அவற்றை முறைப்படுத்தவோ எந்த விதிகளும் இல்லாததாலும் இது போன்ற மோசடி கும்பலுக்கு பெரும் உதவியாக இருப்பதாக சுட்டிக் காட்டுகின்றனர்.

மேலும், வங்கி கடன் வாங்கி தருவதாக செல்போன் மூலம் அணுகும் கும்பலிடம் வங்கி விவரங்களை கொடுக்காமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் காவல் துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments