உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிற டிசம்பர் மாதத்திற்குள் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பார்கள் - முதலமைச்சர் பழனிசாமி

0 437

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிற டிசம்பர் மாதத்திற்குள் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் செந்தமிழ் செல்வனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேனில் ஊர்,ஊராக சென்று ஆதரவு திரட்டினார். இந்த பிரசாரத்தின் போது பேசிய அவர், தமிழக அரசு மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது என்றார். விக்கிரவாண்டி தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உறுதியான நடவடிக்கை எடுக்குமென அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மக்களிடம் மனு வாங்குவதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், கடந்த மூன்றரை ஆண்டுகளாக விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏவான திமுகவைச் சேர்ந்த ராதாமணி பொறுப்பு வகித்த போது, இதே போல ஸ்டாலின் ஏன் மனு வாங்கவில்லை என்றார். மக்களை ஏமாற்ற திமுக தொடர்ந்து நாடகமாடுவதாக அவர் கூறினார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் போனதற்கு திமுக தொடுத்த வழக்கே காரணமென முதலமைச்சர் கூறினார். ஆனால் இப்போது தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அவர், வருகிற டிசம்பர் மாத த்திற்குள் தேர்தல் நடைபெற்று உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்பது உறுதி என்றார்.

இதனிடையே, நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட நடுவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், தமிழகத்தில் முன்பு திமுக ஆட்சியில் இருந்த மின்தட்டுப்பாட்டை முழுவதும் நீக்கி அதிமுக அரசு சாதனை படைத்திருப்பதாக கூறினார்.

ஏழை மாணவர்களுக்கு கல்வியை கற்றுக் கொடுத்தால் அவர்களின் குடும்பம் வளம் பெருகும் என்ற நோக்கில் ஆரம்பகல்வி முதல் உயர்கல்வி வரை 37 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments