நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவருக்கு ஜாமீன் - தந்தைக்கு ஜாமீன் மறுப்பு

0 252

நீட்  தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, அந்த மாணவரின் தந்தைக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தைப் பார்த்து, நீட்தேர்வு ஆள்மாறாட்டத்திற்கு திட்டம் போட்டது போல உள்ளது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதானவர்களின் ஜாமீன் மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தன. முறைகேட்டிற்கு துணையாக இருந்தவர்கள் குறித்த முழு தகவலையும் மாணவரின் தந்தை தெரிவிக்கவில்லை என்றும், விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இத்தகைய போக்கை ஏற்க முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதி, முறைகேட்டில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிவது அவசியம் என தெரிவித்தார். வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காத நிலையில் எதற்காக ஜாமீன் வழங்க வேண்டும்? எனவும் அவர் மாணவரின் தந்தையிடம் கேள்வி எழுப்பினார். காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட போதே, தகவல்களை வழங்கிவிட்டதாக மனுதாரர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இந்த வழக்கை பார்க்கும் போது, வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்திலிருந்து திட்டம் கிடைத்தது போல் இருக்கிறது எனக் குறிப்பிட்ட நீதிபதி, மாணவனின் வயது மற்றும் மன அழுத்தப் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு, ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மதுரை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் முன்பாக தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினார்.

அதேசமயம், முறைகேட்டில் தொடர்புடையவர்களை அடையாளம் கான்பது அவசியம் என்பதால், மாணவரின் தந்தைக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி, ஜாமீன் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

முன்னதாக நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவ, மாணவிகளின் அடையாளங்களை வெளியிட வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments