பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் CBI விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்

0 511

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து சி.பி.ஐ. மேற்கொண்டு வரும் விசாரணையை, சென்னை உயர்நீதிமன்றம்  கண்காணிக்கும் என்றும் இடைக்கால குற்றப்பத்திரிகை நகலை தாக்கல் செய்யுமாறும்  நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், பேராசிரியைகள், இளம்பெண்கள் உள்பட ஏராளமான பெண்களை ஒரு கும்பல் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ படம் பிடித்து, அதை காட்டி மிரட்டி பணம் பறித்து வந்தது. இதில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

பாதிக்கப்பட்ட மாணவியின் கதறல் வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கின் சி.பி.ஐ. புலன் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் மேற்பார்வையிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளோடு சாந்தகுமாரி உள்ளிட்ட 10 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி மற்றும் சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையை சிபிஐ வெளியிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு சிபிஐ தரப்பில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் சிபிஐ விசாரணை தொடங்கியதாகவும், இதுவரை 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் இடைக்கால குற்றபத்திரிக்கையை கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாகவும், மேலும் இந்த வழக்கின் விசாரணை சரியான பாதையில் நடைபெற்று வருவதாகவும் சிபிஐ தரப்பில் கூறப்பட்டது.

இதனையடுத்து, இந்த வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் இடைக்கால குற்றபத்திரிக்கையை சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான அனைத்து வழக்குகளையும் நவம்பர் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments