அண்ணனின் தவறான நடத்தை - தங்கையை பலிவாங்கிய பயங்கரம்

0 667

நாமக்கல்லில் தகாத உறவு விவகாரத்தில் ஒரு குடும்பத்தையே கொலை செய்ய நடந்த கொடூர முயற்சியில் அப்பாவி இளம் தம்பதியர் பரிதாபமாக உயிரிழந்தனர். அண்ணன் செய்த பாவம் தங்கையையும் அவரது கணவரையும் பலிவாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மேட்டுத்தெருவைச் சேர்ந்த விமல்ராஜ், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அனிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இருவரும் அனிதாவின் பெற்றோருடன் சேந்தமங்கலம் ரயில்வே மேம்பாலம் அருகே வசித்து வந்துள்ளனர். இந்த ஜோடிக்கு 5 மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. திங்கட்கிழமை இரவு அனிதாவின் தாய் கலாவதி வெளியே சென்றிருந்த நிலையில், அனிதா, விமல்ராஜ், அனிதாவின் தந்தை கருப்பசாமி உள்ளிட்டோர் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென உள்ளே நுழைந்த ஒரு கும்பல், மூன்று பேரையும் சரமாரியாக வெட்டியுள்ளது.

இதில் அனிதாவும் விமல்ராஜும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட, கருப்பசாமி படுகாயமடைந்துள்ளார். 5 மாத பெண் குழந்தை அர்ஜிதாவை மட்டும் விட்டுவிட்டு அந்த கொடூர கும்பல் தப்பியோடியுள்ளது. சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கருப்பசாமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

உயிரிழந்த அனிதாவுக்கு அருண் என்ற பெயரில் அண்ணன் ஒருவன் இருக்கிறான். அருணும் நாமக்கல் ஏ.எஸ் பட்டியை சேர்ந்த நிக்கல்சன் என்பவனும் ஒன்றாக தொழில் செய்து வந்துள்ளனர். அந்த பழக்கத்தில் அருணை நிக்கல்சன் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல, நிக்கல்சனின் மனைவி ஷோபனாவுக்கும் அருணுக்கும் தவறான பழக்கமும் நெருக்கமும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக அருணும் ஷோபனாவும் தலைமறைவாகியுள்ளனர்.

சில நாட்கள் கழித்து தலைமறைவாக இருந்த அருணுக்கும் நிக்கல்சனுக்கும் போனிலேயே பகை வளர்ந்து வந்துள்ளது. நாளுக்கு நாள் ஆத்திரம் அதிகமாக “என் குடும்பத்தை சீரழித்த உன்னை பழிவாங்க உன் குடும்பத்தையே கொலை செய்கிறேன்” என அருணிடம் நிக்கல்சன் கொக்கரித்ததாகக் கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகவே இந்தக் கொடூர சம்பவம் அரங்கேறியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை தொடர்பாக இருவரைப் பிடித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில்,
தப்பியோடிய நிக்கல்சன் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான். 

அண்ணன் செய்த தப்புக்கு எந்தப் பாவமும் அறியாத அப்பாவி தங்கையும் அவரது கணவரும் பலிவாங்கப்பட்டு, 5 மாத குழந்தை நிர்கதியாக்கப்பட்டிருக்கும் சம்பவம் நாமக்கல்லில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments