108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களிடம் பேரம்.. குளோபல் மருத்துவமனை மீது நடவடிக்கை..!

0 673

நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்கு 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுடன் பேரம் பேசியதாக புகார் எழுந்ததை அடுத்து, பெரும்பாக்கத்தில் செயல்பட்டு வரும் குளோபல் மருத்துவமனை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பட்டியலில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. 

சென்னை பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள குளோபல் மருத்துமவனையில் இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்பு மாற்று அறுவை உள்ளிட்ட உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ள தனியார் மருத்துவமனைகளின் பட்டியலில், குளோபல் மருத்துவமனையும் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் சில காரணங்களுக்கக 5 ஊழியர்களை மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.

இந்த நிலையில் குளோபல் மருத்துவமனை நிர்வாகியான பாஸ்கர்ரெட்டி என்பவர், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சிலருடன் பேசியதாக கூறி ஆடியோ ஒன்றை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் வெளியிட்டுள்ளனர். அதில், விபத்தில் காயமடைந்தவர்கள், அல்லது நோய்வாய்பட்டவர்களை குளோபல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்தால், கமிசனாக நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று கூறுவது போல் உரையாடல் இடம்பெற்றுள்ளது.

108 ஆம்புலன்ஸ் மூலம் நோயாளிகளை அரசு மருத்துவமனைகளுக்கு தான் கொண்டு செல்ல வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில், இந்த ஆடியோ இரு வாரங்களுக்கு முன் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, ஆடியோவின் உண்மைத்தன்மை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து இருந்தார்.

இந்த நிலையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் இருந்து குளோபல் மருத்துவமனை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த திட்டத்தின் கீழ பயனாளிகள் குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாது.

இதற்கிடையே ஆடியோ வெளியான விவகாரம் தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தில் தற்காலிக ஓட்டுனர் பணியில் இருந்த 10 பேர் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிரந்தர பணியில் இருந்த ஓட்டுனர்கள் 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments