புகைப்படத்தால் துப்பு துலங்கியது..! லாரி ஓட்டுநர் கைது

0 808

ஈரோடு மாவட்டம் பவானி அருகே பள்ளி மாணவிகள் இருவர் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், 10 மாதங்களுக்குப் பிறகு லாரி ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அந்தியூர் அருகே மைக்கேல்பாளையத்தைச் சேர்ந்த இரு பள்ளி மாணவிகள் ஆங்கிலப் புத்தாண்டு அன்று மாயமாகினர். 3 நாட்கள் கழித்து அத்தானி அருகே பவானி ஆற்றில் அவர்களது சடலங்கள் மிதந்தன. இதுதொடர்பாக ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் முன்னேற்றம் இல்லாத சூழலில், சிபிசிஐடி விசாரணை கோரி மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் மனு அளித்தனர். இந்த நிலையில், மாணவிகள் இருவரும் ஒன்றாக ஆற்றங்கரையோரம் நின்றபடி எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று அவர்களது செல்போன்களுக்கு வாட்ஸ்ஆப்பில் வந்து இருந்ததை பெற்றோர் கண்டனர்.

ஆற்றங்கரையோரம் இரண்டு மாணவிகளையும் சேர்த்து புகைப்படம் எடுத்து அவர்களுக்கு அனுப்பியது யார் என்ற கேள்வி எழவே விசாரணை மீண்டும் தீவிரம் அடைந்தது. செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் ஆராய்ந்த போது, பவானியை அடுத்துள்ள பருவாச்சி கல்லாங்காட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்த செங்கல் சூளை லாரி ஓட்டுநர் நந்தகுமார் என்ற இளைஞரிடம் மாணவிகளுக்கு பழக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பள்ளி விடுமுறை நாளில் துணிக் கடைக்கு அந்த மாணவிகள் வேலைக்குச் சென்றதாகவும், அப்போது நந்தகுமாரிடம் பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. புத்தாண்டு நாளன்று பெற்றோருக்கு தெரியாமல் நந்தகுமாருடன் மாணவிகள் சென்றதாகவும், அப்போது பவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது.

மாணவிகள் ஆற்றில் மூழ்கியதை அடுத்து நந்தகுமார் தப்பி ஓடி விட்டான். தற்போது போலீசார் நெருங்கியதை அடுத்து ஒரிச்சேரி கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று சரணடைந்தான். இதை அடுத்து ஆப்பக்கூடல் போலீசாரிடம் அவன் ஒப்படைக்கப்பட்டான்.

அவனைக் கைது செய்த போலீசார், பெற்றோர்களுக்கு தெரியாமல் வீட்டில் இருந்து மாணவிகளை அழைத்து சென்றது, விபத்து நிகழும் என்று தெரிந்தும் தடுக்காமல் விட்டது ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாவனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வறுமையின் காரணமாக பள்ளி விடுமுறையின்போது வேலைக்குச் செல்லும் மாணவிகள் தங்கள் பொறுப்பையும் பாதுகாப்பையும் உணராமல் மனம்போன போக்கில் செல்வதால் நேர்ந்த விபரீதம்தான் இது என்பதையும் மறுப்பதற்கில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments