தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்..!

0 203

திருத்தணி வட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால் சுகாராத் துறையினர் போர்க்கால அடிப்படையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

திருவள்ளூர் 

திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுடன் 19 பேர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 134 பேர் காய்ச்சலுடன் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 சிறுவர்கள் உட்பட 19 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

காய்ச்சலின் தீவிரம் குறையாத மேலும் 11 பேர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 19 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்வதால் சுகாதாரத் துறையினர் போர்க்கால அடிப்படையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

தூத்துக்குடி 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தர்மபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் பார்வையிட்டு நோயாளிகளிடம் நலம் விசாரித்து குறைகள் கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட 47பேரில் இருவருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாகவும், சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர், வேலூர்,தர்மபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

சென்னை 

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் டெங்கு பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திவருகிறார் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், மருந்து இருப்புகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கூடுதல் மருத்துவக் குழுக்கள் தேவையா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று கொசு மருந்து அடிக்கும் பணிகள் உள்ளிட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள், கொசுமருந்து கையிருப்பு உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பருவமழைக் காலத்தில் டெங்கு பரவல் வாய்ப்புகள் அதற்கான தீர்வுகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் டெங்கு காய்ச்சலுக்கான மேல்சிகிச்சைக்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 200 க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் 12 வயதிற்குட்பட்ட 21 சிறுவர் சிறுமியருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதே போன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சுமார் 90 பேர் டெங்கு காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை பெறுபவர்களில் பெரும்பாலானோர் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

கோவை

டெங்கு காய்ச்சலால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்பட்டு விடக்கூடாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் கூறியுள்ளார். டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் முனேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து  பேசிய அசோகன்  நன்னீரில் முட்டையிடும் பெண் ஏடிஸ் கொசுக்களால் தான் டெங்குவின் லார்வா புழுக்கள் உருவாவதாகக் கூறி அதனை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவேண்டும் என்றும், உடல் வலி, தலை வலி, கண் வலி, சோர்வு மற்றும் அதிக தாகம் போன்றவை காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்றும் அவர் கூறினார்.

மேலும் கோவை அரசு மருத்துவமனையில் 18 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தனிப் பிரிவில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், கடந்த சில வாரங்களில்  160 பேருக்கு மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

திருப்பூர் 

திருப்பூர் அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காய்ச்சலுடன் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் டெங்கு அறிகுறி யாருக்கும் கண்டறியப்பட வில்லையென மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த மாதத்தில் 15 க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இங்கு தற்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் காய்ச்சலுடன் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் டெங்கு காய்ச்சலுக்கென தனிப்பிரிவு தொடங்கப்பட்டு 24 மணி நேர மருத்துவர் குழுவால் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் குறைந்தவுடன் நோயாளிகள் கண்காணிப்பு பிரிவில் 3 நாட்கள் வைக்கப்பட்டு பூரண குணமடைந்த பின்னரே வீட்டிற்கு அனுப்பப் படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாமக்கல் 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் நகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றனவா என நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் வாழை மரங்களின் மட்டை பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியதோடு, தேக்கி வைக்கப்படும் தண்ணீர் தொட்டிகளில் கொசு புழுக்களை அழிக்கும் மருந்துகள் ஊற்றப்பட்டு, கொசு மருந்து புகையும் அடிக்கப்பட்டது. 300 குடியிருப்புகளுக்கு ஒரு கொசு புழு ஒழிப்பு பணியாளர் என 93 கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆங்காங்கே முகாம் அமைத்து பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments