பொருளாதாரத்தை அழித்து விடுவோம் - துருக்கியை மிரட்டும் அமெரிக்கா

0 562

சிரியாவில் குர்துக்கள் மீது தாக்குதல் நடத்தும் துருக்கி அரசு மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் பொருளாதாரத்தை துரிதமாக அழிக்கப்போவதாக சூளுரைத்துள்ளார்.  

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடிய குர்து இனப் போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தனி நாடு கேட்கும் குர்து இன மக்கள் தங்கள் நாட்டிலும், எல்லையிலும் இருப்பதை துருக்கி அதிபர் டயீப் எர்டோகன் ஆபத்தாக கருதுவதே தாக்குதலுக்குக் காரணமாகியுள்ளது.

ஐந்து நாட்களுக்கும் மேலாக குர்துக்கள் மீது துருக்கியின் தாக்குதல் தொடர்கிறது- இதனிடையே சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் குர்துக்குள் அமெரிக்காவிற்கு உதவியாக இருந்தனர். இதனால் தற்போது குர்துக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கியுள்ளது- அதன்படி, துருக்கி மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பொருளாதார தடை விதித்துள்ளார்.

துருக்கியில் இருந்து இறக்குமதியாகும் எஃகு மீது 50 விழுக்காடு வரை கூடுதலாக வரி விதித்து அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அந்நாட்டுடனான 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை நிறுத்தி வைப்பதற்கான உத்தரவிலும் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

துருக்கி பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர் (Hulusi Akar), உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு (Suleyman Soylu), எரிசக்தி துறை அமைச்சர் ஃபாதி டான்மெஸ் (Fatih Donmez) 
ஆகியோரும் பொருளாதார தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

துருக்கி மீதான பொருளாதார தடையை அமல்படுத்துவது தொடர்பான அதிகாரம் அமெரிக்காவின் கருவூலத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. துருக்கி மீதான பொருளாதார தடை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், குர்துக்கள் மீதான ராணுவத் தாக்குதலால், குடிமக்களின் உயிர்களுக்கும், அமைதி மற்றும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

குர்துக்கள் மீதான தாக்குதலை துருக்கி அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் இல்லை என்றால் அந்நாட்டின் பொருளாதாரத்தை வெகுவிரைவாக அழிப்பதை தவிர வேறு வழியில்லை என்று டிரம்ப் சூளுரைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments