சமூக வலைதளங்களுடன் ஆதார் எண்ணை இணைக்கக் கோரிய வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

0 230

சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருப்போர் அதனுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

முகநூல், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கானோர் கணக்கு தொடங்கி தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதளங்கள் வழியாக போலியான செய்திகள் பரவுவதைத் தடுக்க அதில் கணக்கு வைத்திருப்போர் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் டெல்லியின் பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாயா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் சூர்யாகாந்த் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருவதால் மனுதாரர் அங்கு சென்று அணுகுமாறு தெரிவித்தனர். மேலும் அனைத்து விஷயங்களையும் உச்ச நீதிமன்றத்தின் முன் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினர்.

பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிப்பது குறித்து இன்னும் தாங்கள் முடிவெடுக்கவில்லை என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments