சந்தேகத்திற்கு சமாதானம் மனைவி கொடூர கொலை..! கத்தியுடன் போலீசில் சரண்

0 744

சென்னை அருகே கருத்து வேறுபாடால் பிரிந்து சென்ற கணவனை சந்தித்து சேர்ந்து வாழ சமாதானம் பேசிய மனைவி கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கத்தியுடன் கணவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த பகீர் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை அடுத்த பூவிருந்தவல்லி காட்டுப்பாக்கம் அம்மன் நகரை சேர்ந்தவர் 35 வயதான கிட்டப்பன். இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சுமதி என்ற பெண்ணுடன் திருமணமானது.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கிட்டப்பனுக்கு மனைவி சுமதி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமதி கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். கணவன், மனைவி இடையே தகராறு குறித்து பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரும் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் திங்கட்கிழமை காலை சுமதியை அவரது கணவன் கிட்டப்பன் கத்தியால் தலையில் தாக்கி கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொன்றுள்ளார்.பின்னர் அங்கிருந்து கிட்டப்பன் கத்தியுடன் தப்பி சென்றுவிட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் சுமதி இறந்து கிடந்தார். இதனிடையே கணவன் கிட்டப்பன் கத்தியுடன் பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் சரணடைந்ததால் கொலை செய்யப்பட்ட தகவல் போலீசாருக்கு தெரியவந்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற பூவிருந்தவல்லி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமதியின் நடத்தை குறித்து அக்கம்பக்கத்தினர் தொடர்ந்து அவதூறு தெரிவித்த நிலையில், கணவனுடன் இணைந்து வாழ்ந்தால் இரு குழந்தைகளும் மகிழ்ச்சி அடைவார்கள் என்ற எண்ணத்தில், கணவனின் அழைப்பை ஏற்று அவனது வீட்டிற்கு சுமதி சென்றதாக கூறப்படுகின்றது. ஆனால் மனைவி மீது தீரா கோபத்தில் இருந்த கிட்டப்பன் மறைத்து வைத்திருந்த கத்தியால் தலையில் பலமாக தாக்கி கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளான்.

சுமதிக்கு 2 தங்கைகள் உண்டு. அதில் ஒரு சகோதரியும் ஏற்கனவே கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவளது கணவனால் சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அக்காளும் அதே போல் கணவனால் கொலை செய்யப்பட்டுள்ளதால், குழந்தைகள் நிர்கதியாகி நிற்கின்றன.

கணவன் மனைவி, குடும்ப வாழ்க்கையில் சந்தேகம் தீராத நோய், அது ஏற்படாமல் நடந்து கொள்வது தம்பதியருக்கு அழகு இல்லையேல், இது போன்று ஒருவர் மற்றொருவரை கொலைசெய்யும் கொடூரம் வரை அரங்கேற வழிவகுத்து விடும் என்று எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments