மாமல்லபுரம் மீண்டும் பழைய நிலைக்கு சென்று விடக்கூடாது

0 212

புதிய அழகுடன் காட்சியளிக்கும் மாமல்லபுரத்தை, சுத்தமாக அதே தோற்றத்துடன் காக்க வேண்டிய பொறுப்பு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களிடமே உள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு...

மாமல்லபுரத்தில் ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமையான புராதன சின்னங்களை கண்டு ரசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே பார்த்து ரசித்த இடமாக இருந்தாலும், பல லட்சம் ரூபாய் செலவில் சுத்தம் செய்யப்பட்டு, அழகு மிளிரும் மாமல்லபுரத்தை கண்டு களிக்க மக்கள் குடும்பத்துடன் வருகை தருகின்றனர்.

ஆனால் அவர்களில் சிலர் பொறுப்பு இல்லாமல், கண்கவர் கலை சிற்பங்கள் நிறைந்த இடத்தை அசுத்தப்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டதை, நமது செய்தியாளர் குழு நேரடியாக படம்பிடித்தது.

குடிநீர் அருந்திய பின் பாட்டிலை ஒரு இளைஞர் குப்பை கூடையில் போடாமல் கீழே போட்டார். இது பற்றி அவரிடம் கேட்ட பின்னர், தவறை உணர்ந்து கொண்டதாக கூறினார்...

இதே போன்று மற்றொரு பெண்ணும் குடிநீர் பாட்டிலை குப்பை கூடையில் போடாமல் கீழே வீசினார். அவரிடம் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்ட பின்னர் தவறை உணர்ந்து இனிமேல் பொறுப்புடன் செயல்படுவதாக தெரிவித்தார்..

இதே போன்று கீழே வீசிய நொறுக்கு தீனி பாக்கெட்டை ஒருவர் மீண்டும் எடுத்து சென்றார்.

நல்ல பசியுடன் வந்த லாரி டிரைவர் ஒருவர், லாரியை நிறுத்தி விட்டு மரத்தடி நிழலில் உட்கார்ந்து உணவுப் பொட்டலத்தை பிரித்து புரோட்டாவை சாப்பிட்டார். பின்பு வேறு யாரேனும் பார்க்கிறார்களா என்று நோட்டமிட்டவாறு அங்கேயே பொட்டலத்தை வீசி எறிந்து விட்டு சென்றார்.

புதிய பொலிவுடன் இருக்கும் மாமல்லபுரம் மீண்டும் பழைய நிலைக்கு சென்று விடக்கூடாது என்பதே அனைவரின் விருப்பம். ஆனால் இதற்கான கடமை அரசுக்கு மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களின் கைகளிலும் உள்ளது என்பதே உண்மை. அதுவே, தூய்மை இந்தியா இயக்கம் வெற்றி பெறவும் வழிவகுக்கும்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments