அப்பாவு கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்

0 791

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற திமுக வேட்பாளர் அப்பாவு கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. 

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரை, திமுக சார்பில் அப்பாவு போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதிமுக வேட்பாளரின்  வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி அப்பாவு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

203 தபால் வாக்குகள் செல்லாது என கூறப்பட்டு எண்ணப்படவே இல்லை என்றும், கடைசி 3 சுற்றுகளான 19, 20, 21 ஆகிய சுற்றுகள் எண்ணப்பட்டபோது வாக்கு எண்ணும் இடத்திலிருந்து தாம் வெளியேற்றப்பட்டதாகவும் மனுவில் அப்பாவு முறையிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தபால் வாக்குகளையும், 19, 20, 21 ஆகிய மூன்று சுற்று வாக்குகளையும் மீண்டும் எண்ண உத்தரவிட்டது. அதன்படி மறுவாக்கு எண்ணிக்கை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்டது. இருப்பினும், உச்சநீதிமன்ற தடை காரணமாக முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

செல்லாது என அறிவிக்கப்பட்ட 203 தபால் வாக்குகள், முறையாக சான்றொப்பம் பெறாதவை என்ற வாதத்தின் அடிப்படையில், இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில்தான், மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிடதடை விதித்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், ஒரு வார காலம் விடுமுறை முடிந்து இன்று உச்ச நீதிமன்றம் செயல்பட தொடங்கியது.

அப்போது, நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வில், அப்பாவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, இன்பதுரை தொடர்ந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். ஆனால் இந்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். வரும் 21ஆம் தேதி நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதன் முடிவுகளோடு ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments