ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் 120 விமானிகள் ராஜினாமா

0 341

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் கடந்த 3 முதல் 4 மாதங்களில் சுமார் 120 விமானிகள் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறைந்த ஊதியம், பணியில் முன்னேற்றமில்லாமை, பிற விமான சேவை நிறுவனங்களில் எளிதாக கிடைக்கும் வேலை, பதவி உயர்வு பெறுவதில் சிக்கல் ஆகியவை விமானிகளின் முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

வழக்கமாக  விமானி ஒருவர் கமாண்டராக பதவி உயர்வு பெற 3 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். ஆனால் ஏர் இந்தியா நிறுவனத்தில் பதவி உயர்வு பெற  5 ஆண்டுகள்வரை ஆவதாகக்  கூறப்படுகிறது.

இந்நிலையில் விமானிகளின் ராஜினாமா குறித்த தகவலை ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் உறுதி செய்துள்ளார். இருப்பினும் சரியான எண்ணிக்கையை குறிப்பிடாத அவர், சிலர் மட்டுமே பணியிலிருந்து விலகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தேவைக்கு அதிகமான விமானிகள் தங்கள் நிறுவனத்தில் பணியிலிருப்பதால், இந்த ராஜினாமாக்கள் நிறுவனத்தின் பணிகளை பாதிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

250 மணி நேரம் விமானத்தில் பறந்த அனுபவத்துடன் தேர்வு செய்யப்படும் புதிய விமானிகள், 5 ஆண்டு கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியிலமர்த்தப்படுவதாகவும், அவர்களுக்கு பயிற்சி அளிக்க நிறுவனம் பெரும் தொகையை செலவிடுவதாகவும் மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆனால் 3 ஆயிரத்துக்கும் அதிகமான  மணிக்கணக்கில் விமானத்தில் பறந்த அனுபவத்துடன், விமானிகள் பணியிலிருந்து விலகுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அனுபவம் வாய்ந்த விமானிகள் ராஜினாமா செய்வது வருத்தமளிப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments