ரஃபேல் விமானத்திற்கு ஆயுதபூஜை செய்தது தங்களது நம்பிக்கை - ராஜ்நாத் சிங்

0 454

பிரான்சில் ரஃபேல் விமானத்திற்கு ஆயுதபூஜை செய்தது தங்களது நம்பிக்கை என்றும், அதைப் பற்றி யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

ஃபிரான்ஸ் சென்றிருந்த அவர், முதல் ரஃபேல் போர் விமானத்தை அதிகாரப்பூர்வமாக பெற்றுக்கொண்டார். அந்த விமானத்தில் சுமார் 35 நிமிடங்கள் பறந்தார். இதன் மூலம் ரஃபேல் போர் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். முன்னதாக ரஃபேல் போர் விமானத்திற்கு ராஜ்நாத் சிங் ஆயுதபூஜை செய்தார். இதுகுறித்து சிலர் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தனர். காங்கிரஸ் கட்சியும் நாடகம் என வர்ணித்திருந்தது. இந்நிலையில் ஃபிரான்சில் இருந்து நேற்றிரவு டெல்லி திரும்பிய ராஜ்நாத் சிங், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

தனக்கு சரி என்று பட்டதை தான் செய்ததாகவும், எதிர்காலத்திலும் தனக்கு சரி என்று பட்டதைதான் செய்வேன் என்றும் ராஜ்நாத் சிங் பதிலளித்துள்ளார். பூஜை செய்தது தங்களுடைய நம்பிக்கை என்றும், எல்லாவற்றிற்கும் மேலான சக்தி ஒன்று உண்டு என்பதே, குழந்தைப் பருவம் முதல் தனது நம்பிக்கை என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். எனவே, யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும் அதைப் பற்றிக் கவலையில்லை என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அவரவர் நம்பிக்கைப்படி வழிபடுவதற்கு உரிமை உள்ளது என்றும், இதேபோல வேறு யாரும் பூஜை செய்திருந்தாலும் தாம் ஆட்சேபிக்கப் போவதில்லை என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments